மாமல்லபுரம் பேரூராட்சியில் நடமாடும் கொரோனா தடுப்பூசி முகாம்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் பேரூராட்சி பகுதியில் வாகனத்தில் வீடு, வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடமாடும் முகாம் நேற்று தொடங்கியது. மாமல்லபுரம் பேரூராட்சியில் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. இதில், தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மேலும், சுற்றுலா பயணிகள் அதிக நடமாட்டம் உள்ள பகுதிகளான வெண்ணெய் உருண்டைபாறை, அர்ச்சுணன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோயில் உள்ளிட்ட இடங்களில் சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் என 100 சதவீதம் என அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது.

அதன்படி, மாமல்லபுரம் பேரூராட்சியில் 80 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் உத்தரவின்பேரின் பேரூராட்சிக்கு உட்பட்ட எதாவது ஒரு இடத்தில் தினமும் தடுப்பூசி முகாம் நடந்து வருகிறது. மேலும், தடுப்பூசி முகாமுக்கு நேரில் வர முடியாதவர்கள், போதிய விழிப்புணர்வு இல்லாதவர்கள் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். அதுபோன்ற, நபர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்த திட்டம் வகுக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று மாமல்லபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் 3 வார்டுக்கு ஒரு நடமாடும் மருத்துவ வாகனம் வீதம் மொத்தம் 5 வாகனங்களில் செயல் அலுவலர் ராஜேந்திரன், துப்புரவு ஆய்வாளர் ரகுபதி தலைமையில் டாக்டர்கள், செவிலியர்கள் வீடு, வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கினர். இதில், மொத்தம் 500க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில், துப்புரவு மேற்பார்வையாளர் தாமோதரன் உள்ளிட்ட பலர் பலர் உடனிருந்தனர்.

Related Stories: