ஆன்லைனில் ரம்மி விளையாடி லட்சக்கணக்கில் இழப்பு சென்னை இன்ஜினியர் தூக்கு போட்டு தற்கொலை: வாக்களிக்க வாணியம்பாடி சென்றபோது விபரீதம்

வாணியம்பாடி: ஆன்லைனில் ரம்மி விளையாடி லட்சக்கணக்கில் பணத்தை இழந்த சென்னை இன்ஜினியர், வாக்களிக்க வாணியம்பாடி சென்றபோது பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த புருஷோத்தமகுப்பம் காட்டுகொல்லை பகுதியை சேர்ந்தவர் சிவலிங்கம் மகன் ஆனந்தன்(30). இவர் சென்னையில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2ம் கட்ட வாக்குப்பதிவு நடந்தது. இதனால் தனது சொந்த ஊருக்கு வந்து வாக்களித்து விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது, ‘‘எங்களுக்கு பணம் எதுவும் அனுப்பவில்லையே? நீ சம்பாதிக்கும் பணத்தை ஆன்லைனில் ரம்மி விளையாடி வீணாக செலவு செய்கிறாய்.

இவ்வாறு பல லட்சம் இழந்தும் புத்தி வரவில்லையா? கடன் வாங்கியும் விளையாடுகிறாயே, இனியும் தொடர்ந்து நீ ரம்மி விளையாடக்கூடாது’’ என்று கூறி ஆனந்தனை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் அவர்களிடையே நீண்ட நேரம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மனவேதனையில் இருந்த ஆனந்தன், அன்று இரவே வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த வாணியம்பாடி தாலுகா போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைனில் ரம்மி விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த ஐடி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: