திருப்பதியில் 3ம் நாள் பிரமோற்சவம்: சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி: இன்று காலை கற்பக விருட்ச வாகனம்.!

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3ம் நாள் பிரமோற்சவத்தையொட்டி நேற்று காலை சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவத்தின் 3ம் நாளான நேற்று கல்யாண உற்சவர் மண்டபத்தில் சிம்ம வாகனம் மீது யோக நரசிம்ம அவதாரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோயில் வளாகத்துக்குள் நடக்கும் பிரமோற்சவத்தில் ஜீயர்கள் திவ்ய பிரபந்தங்கள் பாடியும் மற்றும் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்கவும் பூஜைகள் மேற்கொள்ளப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ரங்கநாயகர் மண்டபத்திற்குள் கற்பூர ஆரத்தி வழங்கப்பட்டது. காடுகளின் ராஜாவான சிங்கம் மீது அமர்ந்த யோக நரசிம்ம அவதாரத்தில் வழிபட்டால்  அனைத்து பாவங்களும் நீங்கி மோட்சம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தொடர்ந்து நேற்றிரவு முத்துப்பந்தல் வாகனத்தில் சுவாமி அருள்பாலித்தார். பிரமோற்சவத்தின் 4வது நாளான இன்று காலை கற்பக விருட்ச வாகனத்திலும், இரவு சர்வ பூபால வாகனத்திலும் தேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி எழுந்தருளி காட்சி அளிக்க உள்ளார். பிரமோற்சவத்தின் முக்கிய வாகன சேவையான கருடசேவை 11ம் தேதி இரவு நடைபெற உள்ளது.

Related Stories: