ஓசூர் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு ராபி முன்பருவ பயிற்சி

ஓசூர் : ஓசூர் வட்டாரம் பாகலூர் அடுத்த நந்திமங்கலம் கிராமத்தில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்க திட்டத்தின் கீழ், ராபி முன்பருவ பயிற்சி நடத்தப்பட்டது. மாவட்ட தேசிய உணவு பாதுகாப்பு இயக்க மாவட்ட தொழில்நுட்ப ஆலோசகர் பரசுராமன், இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் பற்றி பேசினார். ஓசூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மனோகரன், ராபி பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள துவரை மற்றும் கொள்ளு பயிர்களுக்கான அங்கக வேளாண்மை தொழில்நுட்பங்கள் பற்றி கூறினார். மேலும் நடமாடும் மண்பரிசோதனை வாகனத்தை கிராமத்திற்கு வரவழைத்து, அதில் மண் பரிசோதனை செய்வது பற்றி விளக்கமளித்தார்.

துணை வேளாண் அலுவலர் முருகேசன் விவசாயிகளுக்கு வழங்கப்படும் சொட்டுநீர் பாசனம், நுண்ணூட்ட உரங்கள் மற்றும் உயிர் உரங்களின் பயன்கள் பற்றி விளக்கமளித்தார். தொடர்ந்து, அச்சந்திரம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள துவரை விதைப்பண்ணை மற்றும் தாசரிப்பள்ளி கிராமத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள ராகி செயல் விளக்க பண்ணைகளை பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. இதில் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த சுமார் 50 விவசாயிகள் கலந்து கொண்டனர். நந்திமங்கலம் பகுதி உதவி வேளாண்மை அலுவலர் சங்கர் நன்றி கூறினார்.

Related Stories: