திருப்பதியில் 2ம் நாள் பிரமோற்சவம் சின்னசேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி அருள்: இன்று சிம்ம வாகனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2ம் நாள் பிரமோற்சவத்தையொட்டி நேற்று காலை சின்னசேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி தாயார்களுடன் அருள் பாலித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் வருடாந்திர 9 நாள் பிரமோற்சவம் நேற்று முன்தினம் மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தலைமை அர்ச்சகர் வேணுகோபால தீட்சிதர் தலைமையில் தங்க கொடிமரத்தில் கருட உருவம் வரையப்பட்ட பிரம்மோற்சவ மஞ்சள் நிற கொடி ஏற்றப்பட்டது. இதையடுத்து, பிரமோற்சவத்தின் முதல் நாளான நேற்று முன்தினம் இரவு பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனர்.

பிரமோற்சவவத்தின் 2ம் நாளான நேற்று காலை சின்னசேஷ வாகனத்தில் (வாசுகி எனும் பாம்பின் மீது அமர்ந்தபடி) மலையப்ப சுவாமி தாயார்களுடன் எழுந்தருளி காட்சி தந்தார். தொடர்ந்து, நேற்றிரவு அன்ன வாகனத்தில் சுவாமி அருள் பாலித்தார். இன்று காலை சிம்ம வாகனத்தில் அருள்பாலிக்க உள்ளார். வரும் 11ம் தேதி காலை மோகினி அவதாரத்திலும், இரவில் முக்கிய நிகழ்வான கருடசேவையும் நடைபெறுகிறது.

ரூ.1.87 கோடி காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று முன்தினம் 13 ஆயிரத்து 303 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 7 ஆயிரத்து 201 பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர். பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை நேற்று முன்தினம் இரவு எண்ணப்பட்டது. அதில், ரூ.1.87 கோடி காணிக்கையாக கிடைத்தது.

Related Stories: