டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கு துணைவேந்தர் தேர்வு செய்ய குழு அமைப்பு

சென்னை:  தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தெரிவுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 10வது துணைவேந்தராக டாக்டர் சுதா சேஷய்யன் கடந்த 2018 டிசம்பர் 31ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். அவரது பதவிக் காலம் வரும் டிசம்பர் 30ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தெரிவுக் குழுவை மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் அமைத்துள்ளார்.

அந்த குழுவுக்கு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர்.பூர்ணலிங்கம் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். மைசூரில் அமைந்துள்ள ஜெ.எஸ்.எஸ் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இணை வேந்தர் டாக்டர் பி.சுரேஷ், போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ மையத்தின் இதய நல சிகிச்சை துறை இயக்குநர் டாக்டர் எஸ்.தணிகாசலம் ஆகியோர் குழுவில் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர். தகுதியான நபர்களை தெரிவு செய்து, அதுகுறித்த பரிந்துரைகளை பல்கலைக்கழகத்தின் வேந்தரான தமிழக ஆளுநருக்கு அக்குழு அனுப்ப உள்ளது. அதை பரிசீலித்து அவர்களில் ஒருவரை புதிய துணைவேந்தராக ஆளுநர் நியமிப்பார்.

Related Stories: