அரசின் விதிமுறைகளை கடைபிடிப்பதே பாதுகாப்பானது கொரோனா வைரஸ் பரவல் நீண்ட காலத்திற்கு இருக்கும்: அழகப்பா பல்கலைக்கழக பேராசிரியர் தகவல்

காரைக்குடி: கொரோனா வைரசின் முக்கிய புரதங்களை அழிக்கும் மருந்துகள் மற்றும் சாத்தியக்கூறுகள் குறித்து சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உயிரி தகவலியல் துறை தலைவர் ஜெயகாந்தன் தலைமையில் ஆராய்ச்சி மாணவர்கள் ரிசாட் மரியதாஸ், ராஜூ ஆகியோர் ஸ்பைக் புரதங்களை அடிப்படையாக கொண்டு ஆராய்ச்சி மேற்கொண்டனர்.இதுகுறித்து பேராசிரியர் ஜெயகாந்தன் கூறுகையில், ‘‘இந்தியாவில் பரவும் டெல்டா வகை கொரோனா வைரஸின் நோய்த்தொற்று தொடர்பான புரதங்களையும் அதன் மாறும் தன்மையையும் கணினி முறையில் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இந்நோய் பரவலுக்கு முக்கிய பங்காற்றும் ஸ்பைக் புரதம் 1,273 அமினோ அமிலங்களை கொண்டது. மற்ற வைரஸ்களை போன்றே கோவிட் 19 வைரஸ் பல்வேறு வகையான மரபணு மாற்றங்களுக்கு உட்படும் தன்மை கொண்டவை. ஸ்பைக் புரதத்தில் ஏற்படும் மாற்றங்கள் நோயின் தீவிரம் மற்றும் தொற்று பரவுதலை அதிகரிக்கும்.

உலகளவில் பல்வேறு ஆராய்ச்சி ஆய்வகங்களில் 3,60,009 கோவிட் தரவுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அவற்றிலிருந்து 47 ஆயிரம் இந்திய ஸ்பைக் புரதங்களை மட்டும் எடுத்துக்கொண்டு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு புரத மூலக்கூறுகளும் ஒவ்வொரு விதமான வேலை செய்யும். இதில் ஸ்பைக் புரத மூலக்கூறு கோவிட் வைரஸ் தாக்குதலுக்கு முக்கியமான புரதமாகும். இதில் உள்ள 1,273 அமினோ அமிலங்களில் 681வது அமினோஅமிலமாக புரோலின் உள்ளது. இந்த அமினோ அமிலம், அரிஜினைன் அமினோ அமிலமாக மாறி டெல்டா வைரஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இதில் வேறுவிதமான அமினோ அமில மாற்றங்கள் ஏற்படலாம். அவ்வாறு ஏற்படும்போது டெல்டாவை விட அதிதீவிர பாதிப்பை ஏற்படுத்தும் என கணினியின் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில் அறியப்பட்டுள்ளது. சரியான தடுப்பு மருந்து கண்டுபிடிக்காத வரையில் கோவிட் 19 என்பது முற்று பெறாமல் மாற்றங்கள் நடந்துகொண்டே இருக்கும். எனவே அரசு அறிவித்துள்ள அனைத்து வழிகாட்டு விதிமுறைகளையும் கடைபிடிப்பதே நம்மை பாதுகாத்துக் கொள்ள சரியான தீர்வு’’ என்றார்.

Related Stories: