பேராவூரணியில் ஒரே நாள் இரவில் பயங்கரம் 5 இடங்களில் தொடர் தீ வைப்பு-வேன் எரிந்து சாம்பல்: மர்ம நபர்களுக்கு வலை

பேராவூரணி : பேராவூரணியில் ஒரே நாள் இரவில் 5 இடங்களில் நடைபெற்ற தொடர் தீ வைப்பு சம்பவத்தில் லோடு வேன் எரிந்து சேதமானது. மேலும், மெக்கானிக் கடை, சமையல் கொட்டகை, பெட்டிக்கடை ஆகியவை தீயில் எரிந்தது. பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் ஆலய பழைய தேரும், புதிதாக செய்யப்பட்ட தேரும், கோயிலுக்கு 200 மீட்டர் எதிரே, திறந்தவெளியில் தகர சீட் அமைத்து பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனருகே அப்பகுதியைச் சேர்ந்த உதயலட்சுமி என்பவருக்கு சொந்தமான சரக்கு ஏற்றும் மினிவேன் நிறுத்தப்பட்டிருந்தது.

வேனுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து எரித்ததில் வேன் முழுவதும் எரிந்து சாம்பலானது. இதன் அருகே உள்ள மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான இருசக்கர வாகன மெக்கானிக் கொட்டகையும் தீ வைக்கப்பட்டதில் எரிந்தது. நள்ளிரவில் தீயை பார்த்ததும் அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். மேலும் அனைவரும் சேர்ந்து தீயை அணைத்ததால் கடையில் நிறுத்தப்பட்டிருந்த வாடிக்கையாளர்களின் இருசக்கர வாகனங்கள் தப்பின.

தொடர்ந்து அப்பகுதியினர் சென்று பார்க்கையில் 200 மீட்டர் தூரத்தில் உள்ள திருமண மண்டபத்தின் சமையல் கொட்டகையும் தீ வைத்து எரிக்கப்பட்டு இருந்தது. மேலும், சற்று தூரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியாருக்கு சொந்தமான கழிவுநீர் அகற்றும் லாரியின் பெட்ரோல் டேங்கில் தீ வைக்க முயற்சி நடந்து அதில் ஓரளவு தீப்பற்றிய நிலையில் தானாக அணைந்துள்ளதும் தெரியவந்தது.

தொடர்ந்து, அங்கிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் அறந்தாங்கி ரோட்டில் ராதா என்ற பெண் ஒருவர் நடத்தி வந்த பெட்டிக் கடைக்கு தீ வைக்கப்பட்டதில் முழுவதுமாக தீக்கிரையானது. தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் ஒருவருக்கு ஒருவர் தொடர்பில்லாவிட்டாலும் இச்சம்பவத்தில் ஒரே நபர் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், கஞ்சா புகைக்கும் நபர்கள் இப்பகுதியில் இரவு நேரங்களில் அதிகமாக சுற்றுவதாகவும், பேராவூரணி நகரில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளதாகவும், கஞ்சா விற்பனையைக் கட்டுப்படுத்த காவல்துறை நடவடிக்கை எடுத்தால் குற்றச்செயல்களை தடுக்கலாம் தெரிவித்தனர்.கடந்த வாரத்தில் பேருந்து நிலையத்தில் ஒருவர் கொலைசெய்யப்பட்டு கிடந்தார், போலீசார் தீவிர விசாரணை செய்தால் தீவைப்பு சம்பவத்தில். ஈடுபட்டவர்களுக்கு தொடர்பு இருக்க வாய்ப்புள்ளது என்றனர்.\

சம்பவ இடங்களை எம்எல்ஏ அசோக்குமார், வர்த்தக சங்க முன்னாள் தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர். பேராவூரணி போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: