அம்மாபேட்டை அருகே 10 நாட்களாக பூட்டியே கிடந்த அரசு கொள்முதல் நிலையம்-விவசாயிகள் போராட்டத்திற்கு பின் திறப்பு

தஞ்சை : அம்மாபேட்டை அருகில் புத்தூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க கோரி விவசாயிகள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அருகில் புத்தூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் கடந்த 10 தினங்களாக திறக்கப்படாமல் குறுவை அறுவடை செய்யப்பட்ட நெல் மணிகளை 5 ஆயிரம் பை நெல்லை கொட்டி வைத்து காத்துக்கிடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாக மாவட்ட உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பவில்லை.

விவசாயிகள் தினந்தோறும் நெல்லை காய வைப்பதும் மழையில் நனைவதுமாக தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த நிலையில் உடனடியாக புத்தூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க கோரி விவசாயிகள் புத்தூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பந்தப்பட்ட விவசாயிகள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த தகவலறிந்து 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சம்பந்தப்பட்ட அதிகாரிகள், காவல்துறையினர் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி உடன் புத்தூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு பட்டியல் எழுத்தாளர் சக்திவேல் நியமிக்கப்பட்டு நெல் கொள்முதல் பணி துவங்கப்பட்டது.

Related Stories: