டவுன் பஸ்களில் தினமும் 40,000 பெண்கள் பயணம்-கிராம பெண்கள் அதிகளவில் பயன்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து அரசு டவுன் பஸ்களிலும் ஆண்களைவிட பெண்களே கூடுதலாக பயணித்து வருவதாக போக்குவரத்து அலுவலர்கள் தெரிவித்தனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த மே 7ம் தேதி தமிழக முதல்வராக பதவிவேற்றதும் தேர்தல் வாக்குறுதியாக கொடுக்கப்பட்ட 5 முக்கிய திட்டங்களை செயல்படுத்த கையெழுத்திட்டார். அதில் டவுன் பஸ்களில் பெண்கள் பயணிக்க கட்டணம் செலுத்த தேவையில்லை என்பதும் ஒரு முக்கியமான திட்டமாகும்.

இத்திட்டம் மே 8 முதல் அமலுக்கு வந்தது. அனைத்து டவுன் பஸ்களின் முகப்பு கண்ணாடியிலும் மகளிர் பயணம் செய்ய கட்டணமில்லை என்ற ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி மண்டலம் சார்பில் சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்தூர் ஆகிய இடங்களில் பணிமனைகள் உள்ளன. மாவட்டத்தில் உள்ள 4 பணிமனைகளில் 159 ரூட் பஸ்கள் உள்பட சுமார் 300 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதில் 97 டவுன் பஸ்களில் பெண்கள் கட்டணமின்றி இலவசமாக பயணம் செய்து வருகின்றனர். மே 10 முதல் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் அரசு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மீண்டும் ஜூன் 28 முதல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இதையடுத்து டவுன் பஸ்களில் கடந்த மூன்று மாதங்களாக பெண்கள் டிக்கெட் கட்டணமின்றி இலவசமாக பயணம் செய்து வருகின்றனர். இதற்கு முன்பைவிட இந்த மூன்று மாத காலத்தில் டவுன்பஸ்களில் பெண்களே கூடுதலாக பயணித்து வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தில் சராசரியாக ஒரு நாளைக்கு 40 ஆயிரம் பெண்கள் டிக்கெட் கட்டணமின்றி டவுன் பஸ்களில் பயணம் செய்து வருகின்றனர். இவ்வாறு இதுவரை 36 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பயணம் செய்துள்ளனர். போக்குவரத்து துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், சிவகங்கை மாவட்டத்தில் முன்பைவிட தற்போது பெண்கள் அதிகமாக டவுன் பஸ்களில் பயணிக்கின்றனர்.

ஒவ்வொரு பஸ்சிலும் சராசரியாக 60 முதல் 70 சதவீதம் பெண்களே பயணிக்கின்றனர். கிராமங்களுக்கு சென்று வரும் டவுன் பஸ்களிலேயே இந்த எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இது முந்தைய ஆண்டுகளை விட மிக அதிகமாகும். பெண்களுக்கு டவுன் பஸ்களில் கட்டணமில்லை என அறிவித்திருப்பதால் கிராம பெண்கள் முழுமையாக பயன்பெற்று வருகின்றனர் என்றார்.

Related Stories: