சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் அண்ணாத்த பாடல் வெளியானது: அண்ணாத்த... அண்ணாத்த... வர்றேன் அதிரடி சரவெடி தெருவெங்கும் வீசு...

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் ஒரு பாடல் நேற்று வெளியிடப்பட்டது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ரஜினிகாந்த் நடிப்பில் அண்ணாத்த திரைப்படத்தை சன் டி.வி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பிரமாண்டமாக தயாரிக்கிறார். இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். இமான் இசை அமைக்கிறார். வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். எடிட்டிங், ரூபன். நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி, ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், வேல ராமமூர்த்தி உள்பட பலர் நடிக்கிறார்கள்.

எந்திரன், பேட்ட படங்களுக்கு பிறகு சன் பிக்சர்ஸ், ரஜினிகாந்த் இணைந்துள்ள மூன்றாவது படம் அண்ணாத்த. இதனால் இந்த படத்திற்கு ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. எந்திரன், பேட்ட படங்களின் மாபெரும் வெற்றியால் அண்ணாத்த படத்தை அனைத்து தரப்பினரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த படம் தீபாவளி தினத்தன்று, வரும் நவம்பர் 4ம் தேதி தியேட்டர்களில் ரிலீசாகிறது.  இந்நிலையில் இந்த படத்தில் இமான் இசையில், பாடலாசிரியர் விவேகா எழுதி உள்ள பாடலை, மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடி உள்ளார். இந்த பாடல் 4ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி நேற்று மாலை இணையதளத்தில் இந்த பாடல் வெளியிடப்பட்டது. ‘‘அண்ணாத்த... அண்ணாத்த... வர்றேன் அதிரடி சரவெடி தெருவெங்கும் வீசு... அண்ணாத்த... அண்ணாத்த... வர்றேன் நடையில உடையில கொல கொல மாஸு...’’ என்ற இந்த பாடலில் ரஜினிகாந்த் ஸ்டைலாக தோன்றுகிறார். பாடல் வரிகளுக்கான வீடியோவில் அந்த காட்சிகள் இடம்பெற்றுள்ளது. ரசிகர்களை இந்த பாடல் வெகுவாக கவர்ந்துவிட்டது. இந்த பாடல் வெளியான சில மணி நேரத்திலேயே யுடியூப்பில் வைரலானது. ஏராளமான பார்வையாளர்கள் இந்த பாடலை பார்த்தும் கேட்டும் ரசித்தனர். சமூக வலைத்தளங்களில் இந்த பாடலின் லிங்க்கை ரசிகர்கள் வெளியிட்டும் வைரலாக்கினர்.

* எஸ்.பி.பியின் கடைசி பாடல்... ரஜினி உருக்கமான டிவிட்

அண்ணாத்த படத்தில் நேற்று வெளியான பாடலை மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியிருந்தார். அவர் ரஜினிகாந்துக்காக பாடிய கடைசி பாடல் இதுதான். இது குறித்து டிவிட்டரில் ரஜினிகாந்த் நேற்று உருக்கமாக கூறியிருப்பதாவது: 45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி அவர்கள் அண்ணாத்த படத்தில் எனக்காக பாடிய பாடலின் படப்பிடிப்பின் போது, இதுதான் அவர் எனக்கு பாடும் கடைசி பாடலாக இருக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. என் அன்பு எஸ்பிபி தன் இனிய குரலின் வழியாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார். இவ்வாறு ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

Related Stories: