பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை சிறப்பு டிஜிபி மீதான வழக்கை விசாரிக்க முழு அதிகாரம் உண்டு: மனுவை தள்ளுபடி செய்தது விழுப்புரம் கோர்ட்

விழுப்புரம்: பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை தொடர்பான வழக்கில், சிறப்பு டிஜிபி, எஸ்பி தாக்கல் செய்த மனுக்களை விழுப்புரம் கோர்ட் தள்ளுபடி செய்தது. தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியின்போது, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தில் பாதுகாப்பு பணியிலிருந்த பெண் எஸ்பி ஒருவருக்கு, முன்னாள் சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை அளித்ததாகவும், அவருக்கு உடந்தையாக செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி கண்ணன் செயல்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன.

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பெண் எஸ்பி அளித்த புகாரின்பேரில், சிறப்பு டிஜிபி, எஸ்பி ஆகியோர் மீது விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை நேற்று நீதிபதி கோபிநாதன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எஸ்பி கண்ணன் நேரில் ஆஜரானார். சிறப்பு டிஜிபி ஆஜராகவில்லை. அவரது தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி மனுதாக்கல் செய்தார். அதை நீதிபதி ஏற்றுக்கொண்டார். சிறப்பு டிஜிபி தரப்பில், இந்த வழக்கு விழுப்புரம் கோர்ட் வரம்பிற்குள் வராது.

எனவே, வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதேபோல், எஸ்பி தரப்பில் வழக்கிற்கும் தனக்கும் சம்மந்தமில்லை. எனவே, தன்னை விடுவிக்க வேண்டுமென்று மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்கள் மீதான இருதரப்பு வாதம் நேற்று முடிவடைந்தது. இதையடுத்து, நீதிபதி கோபிநாதன், டிஜிபி, எஸ்பி தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த வழக்கை விசாரிக்க விழுப்புரம் கோர்ட்டிற்கு முழு அதிகாரம் இருப்பதாகவும், எஸ்பி கண்ணன் மீதான குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதால் அவரை வழக்கிலிருந்து விடுவிக்க முடியாது என்றும் உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து, வழக்கு விசாரணையை வரும் 8ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி கோபிநாதன் உத்தரவிட்டார்.

Related Stories: