சென்னையிலிருந்து திருப்பதிக்கு திருக்குடை ஊர்வலம் தொடங்கியது: பக்தர்கள் உற்சாகம்

கீழ்ப்பாக்கம்: திருப்பதி தேவஸ்தானத்தில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பிரமோற்சவ விழா நடைபெறும். இதையொட்டி, அயனாவரத்தில் உள்ள திருப்பதி திருக்குடை சேவா சமிதி அறக்கட்டளை சார்பில், சென்னையில் இருந்து திருக்குடைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, பிரமோற்சவ விழாவில் சமர்ப்பிக்கப்படும். அதன்படி, நேற்று முன்தினம் 4 திருக்குடைகள் பாரிமுனை சென்னகேசவ பெருமாள் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, கோவிந்தா... கோவிந்தா... என கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து, திருக்குடை ஊர்வலம் மேள தாளங்கள் முழங்க திருப்பதி நோக்கி புறப்பட்டது.

ஊர்வலத்தை தமிழக விஷ்வ இந்து பரிஷத் தலைவர் சீனிவாசன் தொடங்கி வைத்தார். அறக்கட்டளை தலைவர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார். அறக்கட்டளை நிர்வாகிகள் தணிகைவேல், சீனிவாசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த திருக்கொடை ஊர்வலம் யானைகவுனி, அவதான பாப்பையா ரோடு, கே.எச்.ரோடு வழியாக அயனாவரம் காசிவிஸ்வநாதர் கோயிலை வந்தடைந்தது. அங்கு திருக்குடைகளை பள்ளி, கல்லூரி மாணவிகள் பாட்டுப்பாடி, நடனமாடி வரவேற்று வழிபட்டனர். அங்கு நேற்று முன்தினம் இரவு தங்கிய திருக்குடைகள், நேற்று காலை மேளதாளம் முழங்க மீண்டும் புறப்பட்டது. தொடர்ந்து வில்லிவாக்கம், ஆவடி, புத்தூர், திருவள்ளுர் வழியாக திருப்பதிக்கு இன்று சென்றடைகிறது. பின்னர் 6ம் தேதி நடைபெறும் பிரமோற்சவத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது. ஊர்வலமாக வந்த திருக்குடைகளை வழிநெடுகிலும் ஏராளமான பொதுமக்களும், பக்தர்களும் வணங்கி வழியனுப்பினர்.

Related Stories: