தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களுக்கான தேர்தல் செலவு கணக்கை காட்டாமல் பாஜ இழுத்தடிப்பு: ரூ.154 கோடியை இறைத்தது திரிணாமுல்

புதுடெல்லி: தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் நடந்த தேர்தல் செலவு  தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம் மற்றம்  அசாம் மாநிலங்களில் கடந்த மார்ச், ஏப்ரலில் பல்வேறு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. இதில், பிரசாரத்துக்காக செலவிட்ட  தொகைக்கான கணக்கை, தேர்தல் ஆணையத்திடம் பல்வேறு தேசிய மற்றும் மாநில கட்சிகள்  தாக்கல் செய்துள்ளன. இதை தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதில், அதிகப்பட்சமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ், தனது பிரசாரத்துக்காக ரூ.154 கோடியே 28 லட்சத்தை செலவு செய்துள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடித்தது. இத்தேர்தல் பிரசாரத்துக்காக தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய 2 மாநிலங்களுக்கும் சேர்த்து மொத்தமாக  ரூ.114 கோடியே 14 லட்சத்து 8 ஆயிரத்து 525ஐ திமுக செலவு செய்துள்ளது. அதேபோல், இந்த 2 மாநிலங்களிலும் அதிமுக ரூ.57 கோடியே 33 லட்சத்து 86 ஆயிரத்து 773-ஐ செலவு செய்திருப்பதாக கணக்கு காட்டியுள்ளது. தேர்தல் நடந்த ஐந்து மாநிலங்களிலும் மொத்தமாக ரூ.84 கோடியே 93 லட்சத்து 86 ஆயிரத்து 986 ஐ காங்கிரஸ் செலவு செய்துள்ளது.  5 மாநிலங்களிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ரூ.13 கோடியே 19 லட்சத்து 47 ஆயிரத்து 797 செலவு செய்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜ உள்ளிட்ட கட்சிகள் செய்த செலவுகளின் கணக்கு இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை என்று தெரிகிறது. இவற்றின் செலவு கணக்கு விவரம், தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இடம் பெறவில்லை.

Related Stories: