உத்திரமேரூர் கூட்டுறவு வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.1.65 கோடி மோசடி

உத்திரமேரூர்: கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை அடமானம் வைத்தவர்களது கடன் ரத்து செய்யப்படும் என தேர்தல் அறிவிப்பின்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதையொட்டி, கூட்டுறவு வங்கிகளில் நகைகள் அடமானம் வைக்காமலேயே, சிலர் கடன் பெற்றதாக புகார் எழுந்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் ஆய்வு நடத்தப்படுகிறது.  இந்நிலையில், உத்திரமேரூரில் தொடக்க கூட்டுறவு வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி இயங்குகிறது.

இங்கு கடன் மற்றும் நகை கடன் உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகிறது. அதன்படி, நகை கடன் வழங்குவதில் மோசடி நடைபெற்று உள்ளதாக புகார்கள் எழுந்தன. புகாரின் பேரில் கூட்டுறவு சங்க அதிகாரிகள், வங்கியில் தணிக்கை செய்தனர். அப்போது, போலி நகைகளை வைத்து ரூ.1 கோடியே 64 லட்சத்து 83 ஆயிரத்து 500 மோசடி செய்தது தெரிந்தது. இதையடுத்து, தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டப்பிரிவின் கீழ் விசாரணைக்கு ஆணையிடப்பட்டுள்ளது. வங்கிப் பணியாளர்கள் 2 பேர், நகை மதிப்பீட்டாளர் ஒருவர் உட்பட மொத்தம் 3 பேர் மீது நேற்று துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் வங்கியில் போலி நகை கடன்கள் பெற்றவர்களும், இவ்வழக்கில் பொறுப்பாக்கப்பட்டுள்ளனர். சங்க பணியாளர்கள் மற்றும் நகை மதிப்பீட்டாளர் ஆகியோர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வணிக குற்றப் புலனாய்வு பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட, நிதி இழப்பு தொகையை வசூலிக்க சம்பந்தப்பட்ட பணியாளர்களின் சொத்துகளை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

Related Stories: