மசினகுடி புலி இருக்குமிடம் தெரிந்தது; புலியை பிடிப்பதற்கே முழு முயற்சி: வனத்துறை விளக்கம்..!

நீலகிரி: புலியை பிடிப்பதற்கே முழு முயற்சி மேற்கொள்ளப்படும் என வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. முதுமலை புலிகள் காப்பகத்தில் மசினகுடி வனப்பகுதியில் 4 பேரை கொன்ற புலி இருக்குமிடம் தெரிந்தது. புலி இருக்கும் இடத்தை சுற்றி வளைத்து சுட்டுக் கொல்ல வனத்துறை மற்றும் அதிரடிப்படையினர் தயாராகி வருகின்றனர். புலியை சுட்டுக்கொல்ல வனத்துறையினர் 20 பேர் 5 குழுக்களாக பிரிந்து தேடுதல் வேட்டை நடத்தினர். புலியை பிடிக்க தேடுதல் வேட்டை நடந்து கொண்டிருந்த போதே மசினகுடியில் ஒருவரை புலி தாக்கி கொன்றது.

கூடலூர் சுற்றுவட்டாரத்தில் சுற்றி திரியும் புலி இதுவரை 4 பேரை தாக்கி கொன்றுள்ளது. தொடர்ந்து மனிதர்களை வேட்டையாடியதால் புலியை சுட்டுக்கொல்ல வனத்துறை உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து புலியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நீலகிரி வனத்துறை, கேரள வனத்துறை, அதிரடிப்படையினர் என 100-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புலியை பிடிப்பதற்கே முழு முயற்சி மேற்கொள்ளப்படும் என வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. புலியை பிடிப்பதற்கான முயற்சி தோல்வியடைந்தால் மட்டுமே சுட்டுக் கொல்லப்படும்.

அதே இடத்தில் 4 புலிகளின் நடமாட்டம் உள்ளதால் மாற்று புலியை சுடக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆட்கொல்லி புலியின் புகைப்படத்தை காண்பித்து அதன் அடையாளங்களை வைத்து சரியான புலியை சுட அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது என்றும் விளக்கம் அளித்துள்ளது. மேலும் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் எனவும் வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Stories: