தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க வைப்பு நிதி ரூ.34 லட்சம் முறைகேடு: சங்கத் தலைவர் உள்பட 3 பேர் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க வைப்பு நிதி ரூ.34 லட்சம்  முறைகேடு செய்த சங்க தலைவர், செயலாளர் உள்பட 3 பேரை, வணிக குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் அடுத்த கீழ்பேரமநல்லூரில் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் அமைந்துள்ளது. இங்கு 3000க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் ஏராளமானோர் நிரந்தர வைப்பு தொகை செலுத்தியுள்ளனர். கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த 2017ம் ஆண்டுவரை அதிமுகவை சேர்ந்த அசோகன் என்பவரது மனைவி உமா தலைவராக இருந்தார். 2017ம் ஆண்டுமுதல் அதிமுகவை சேர்ந்த அசோகன் தலைவராக  உள்ளார்.

இந்நிலையில் கூட்டுறவு சங்க செயலாளர் தேவநாதன் என்பவருடன் சேர்ந்து அசோகன், அவரது மனைவி உமா ஆகியோர், போலியான ஆவணங்களை உள்ளீடு செய்து, ஒப்புதல் வாங்கி நிரந்தர வைப்பு தொகையில் முறைகேடு செய்துள்ளதாக மாவட்டப் பதிவாளர் உமாபதிக்கு புகார் வந்தது. அதன்பேரில், நடத்திய விசாரணையில், முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, மாவட்ட பதிவாளர் உமாபதி, வணிக குற்ற புலனாய்வு போலீசில் புகார் அளித்தார். வணிக குற்றப் புலனாய்வு இன்ஸ்பெக்டர் தேன்மொழி, கீழ்பேரமநல்லூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க நிரந்தர வைப்புத் தொகையில் ரூ.32 லட்சம் முறைகேடு செய்த தலைவர் அசோகன், உடந்தையாக இருந்த செயலாளர் தேவநாதன், கீழ்பேரமநல்லூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின்கீழ் செயல்படும் ரேஷன் கடை வருவாயில் ரூ.2 லட்சம் முறைகேடு செய்த ரேஷன்கடை ஊழியர் மணி ஆகியோரை கைது செய்தார். பின்னர், காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார். மேலும் தலைமறைவாக உள்ள முன்னாள் தலைவர் உமாவை தேடி வருகின்றனர்.

Related Stories: