தமிழகம் முழுவதும் 200 இடங்களில் கைவரிசை பிரபல கொள்ளையன் சிவகங்கையில் கைது: திருடிய பணத்தில் நடிகைகளுடன் உல்லாசம் அம்பலம்

பெரம்பூர்: தமிழகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட இடங்களில் கைவரிசை காட்டி வந்த பிரபல கொள்ளையன் சிவகங்கையில் கைது செய்யப்பட்டான். திருடிய பணத்தில் நடிகைகளுடன் உல்லாசமாக இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. சென்னை கொளத்தூர் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள ஸ்வீட் கடையின் பூட்டை உடைத்து கடந்த மாதம் 2ம் தேதி ரூ.22 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில், கொளத்தூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மாலதி மற்றும் போலீசார் வழக்கு பதிந்து, சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் பதிவான நபரின் படத்தை பல்வேறு காவல் நிலையங்களுக்கு அனுப்பி விசாரித்தனர்.

அதில், சிசிடிவி கேமராவில் பதிவான நபர், மதுரை திருப்பரங்குன்றம் சந்திர பாளையம் பகுதியை சேர்ந்த காளிதாஸ் (54) என்பதும், இவர் மீது தமிழகம் முழுவதும் பல குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, கொளத்தூர் குற்றப்பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து அவரை தேடியபோது, சிவகங்கையில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்படி கடந்த 28ம் தேதி தனிப்படையினர், சிவகங்கை சென்று அங்கு ஒரு வீட்டில் பதுங்கியிருந்த காளிதாசை மடக்கி பிடித்தனர். அவரை நேற்று முன்தினம் கொளத்தூர் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.

இதில், தமிழகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட இடங்களில் திருட்டில் ஈடுபட்டது தொடர்பாக 70 காவல் நிலையங்களில் வழக்கு இருப்பதம், 5 முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதும் தெரியவந்தது. மேலும் பல திடுக்கிடும் தகவல்களும் கிடைத்துள்ளது. போலீசில் காளிதாஸ் அளித்த வாக்குமூலம் வருமாறு: பெரும்பாலும் டீ கடைகளில் திருடுவதை வாடிக்கையாக வைத்திருந்தேன். டீக்கடைகளில் 5 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருக்காது. இதனால், பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் கொடுத்தாலும் போலீசார் அந்த வழக்கை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். இதை பயன்படுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட டீக்கடைகளில் திருடியுள்ளேன். திருடிய பணத்தில் பிரபல நடிகைகளுடன் உல்லாசமாக இருப்பேன். பணம் குறைவாக இருந்தால் துணை நடிகைகளுடன் உல்லாசமாக இருப்பேன். இதற்காக தனியாக புரோக்கர்கள் உள்ளனர்.

கடந்த சில ஆண்டுக்கு முன்பு ரிலீசான 3 எழுத்து திரைப்படத்தில் நடித்த பிரபல மலையாள நடிகையுடன் உல்லாசமாக இருந்தேன். இதற்காக அந்த நடிகைக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் கொடுத்தேன். தற்போது அந்த நடிகை சினிமா வாய்ப்பு இல்லாமல் உள்ளார். எப்போதும் வெள்ளை சட்டை அணிந்து நல்லவன்போல் காண்பித்துக் கொள்வேன். ஒரு இடத்தில் கொள்ளையடித்துவிட்டு வேறு இடத்திற்கு சென்றுவிடுவேன். இவ்வாறு காளிதாஸ் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து கைது செய்யப்பட்ட காளிதாசை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

போலீசுக்கு சவால்

இதுவரை 200க்கும் மேற்பட்ட இடங்களில் திருடியுள்ளேன். ஆனால் ஒருமுறைகூட போலீசார் என்னை, கையும் களவுமாக பிடித்ததில்லை. எந்த நேரத்தில் திருடினால் போலீசார் வரமாட்டார்கள் என்பது எனக்கு நன்றாக தெரியும். நான் திருடும் போது என்னை போலீசார் கையும் களவுமாக பிடித்துவிட்டால், திருட்டு தொழிலை விட்டு விடுகிறேன் என காளிதாஸ் தனது நண்பர்களிடம் சவால் விட்டு இருந்ததும் விசாரணையில் வந்துள்ளது.

Related Stories: