வாணியம்பாடி, ஆம்பூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி, கல்லூரி பஸ்களில் வருவாய் கோட்டாட்சியர் திடீர் ஆய்வு-குறைபாடுள்ள 25 பஸ்களை மறு ஆய்வுக்கு உத்தரவு

வாணியம்பாடி : வாணியம்பாடி, ஆம்பூர் பகுதிகளில் செயல்பட்டுவரும் பள்ளி, கல்லூரி பஸ்களை வருவாய் கோட்டாட்சியர் திடீர் ஆய்வு செய்தார். அப்போது குறைபாடுள்ள 25 பஸ்களை மறு ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கொரோனா காலத்திற்கு பின்பு வருகிற நவம்பர் 1ம் தேதி முதல் தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரையில் உள்ள பள்ளிகளை  திறக்க அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி வருகிற நவம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் துவங்க உள்ளது.  அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில், நேற்று காலை 11 மணிக்கு வாணியம்பாடி அடுத்த  சின்னகல்லு பள்ளியில் உள்ள ஜெயின் மகளிர் கல்லூரி மைதானத்தில்  ஆம்பூர் மற்றும் வாணியம்பாடியில் உள்ள தனியார் பள்ளிகளின் முதல் கட்டமாக 75 பஸ்கள் ஆய்வுக்காக கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.

இதனை வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலர் என்.ராமகிருஷ்ணன், ஆய்வாளர்கள் வெங்கட்ராகவன், அமர்நாத் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது 25 பஸ்களில் போதுமான பாதுகாப்பு வசதி, முதலுதவி பெட்டிகள் அமைக்கப்படாதது மற்றும் உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளை சரிசெய்து மறு ஆய்வுக்கு உட்படுத்த அதிகாரிகளுக்கு வருவாய்க் கோட்டாட்சியர் உத்தரவிட்டார்.  

மீண்டும் இந்த வாகனங்கள் 15 நாட்களில் அதன் குறைகளை நிவர்த்தி செய்து ஆய்வுக்கு கொண்டுவர வேண்டும் என  அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, பள்ளி வாகனங்களை ஓட்டும் டிரைவர்களுக்கான சிறப்பு கூட்டம் நடந்தது. அதில் வருவாய் கோட்டாட்சியர் பேசுகையில், ‘பள்ளி மாணவ, மாணவிகளை அழைத்து செல்லும் போது மிகவும் பாதுகாப்பாக வாகனங்களை இயக்க வேண்டும்.

ஒவ்வொரு பஸ் நிறுத்தத்திலும், மாணவர்களை ஏற்றிச் செல்லும் போது அதற்கான நடத்துனர்கள் முறையாக  மாணவ, மாணவிகளை ஏற்றி இறக்கி விட வேண்டும். மேலும் பாதுகாப்பு குறைகளை நிவர்த்தி செய்யாத வாகனங்களின் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். இந்தக் கூட்டத்தில் வாணியம்பாடி தாசில்தார் மோகன் உட்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: