அம்பத்தூரில் உள்ள குடோனில் லாரிகளில் இருந்து ஆயில் திருடி கலப்படம் செய்த 5 பேர் கைது: இரு டேங்கர் லாரிகள் பறிமுதல்

அம்பத்தூர்: அம்பத்தூர் -செங்குன்றம் நெடுஞ்சாலை, கள்ளிகுப்பம் பகுதியில் உள்ள ஒரு குடோனில் சென்னை மேற்கு மண்டல திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது, அங்கு 2 பர்னஸ் டேங்கர் லாரிகளில் இருந்து ஆயிலை திருடி சிலர் கலப்படம் செய்து கொண்டிருந்தனர். அங்கிருந்து 5 பேரை பிடித்தனர். பின்னர் இது குறித்து அம்பத்தூர் உணவு பொருள் கடத்தல் மற்றும் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்தனர். அவர்களிடம் பறிமுதல் செய்த 2 டேங்கர் லாரிகளுடன், பிடிபட்ட  5 பேரை ஒப்படைத்தனர்.  

விசாரணையில், இந்த குடோனில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் இருந்து வரும் டேங்கர் லாரிகளில் இருந்து பெட்ரோல், டீசல், பர்னஸ் ஆயில் ஆகியவற்றை ஒரு லாரிக்கு 2000 லிட்டர் வீதம் திருடி, அதன் பின்பு சோப் ஆயில், மண்ணெண்ணெய் ஆகியவற்றை கலந்ததும், பின்பு, ஒரிஜினல் பெட்ரோல், டீசல் பர்னஸ் ஆயில் ஆகியவற்றை மற்றவர்களுக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. இது தொடர்பாக திருவண்ணாமலை மாவட்டம், கங்கனம் கிராமத்தை சேர்ந்த வீரராகவன் (35), ஏழுமலை (42), ஆவடி கொள்ளுமேடு, கிருஷ்ணவேணி நகரைச் சேர்ந்த மன்னராசு (49), வேலூர் மாவட்டம், வாணியம்பாடியை சேர்ந்த ரமேஷ் (40), திருவண்ணாமலை மாவட்டம், கரந்தல் கிராமத்தை சேர்ந்த ஜோகின் (52) ஆகியோரை கைது செய்தனர். மேலும், குடோன் உரிமையாளரான பாலாஜி, மணவாளன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Related Stories: