வாடிபட்டி அருகே அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிய அதிமுக மாஜி எம்எல்ஏ லாரி பறிமுதல்: டிரைவர் கைது

வாடிப்பட்டி: உரிய அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ மாணிக்கத்திற்கு சொந்தமான லாரியை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மதுரை மாவட்டம், வாடிப்பட்டி கால்நடை மருத்துவமனை அருகே, நீரேத்தான் வருவாய் ஆய்வாளர் சஞ்சீவிநாதன், குலசேகரன்கோட்டை விஏஓ முத்துப்பாண்டி ஆகியோர் கொண்ட வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனையிட்டனர்.

இதில் சுமார் 6 யூனிட் கிராவல் மண் இருந்தது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரித்தபோது, உரிய அனுமதி இல்லாமல் கிராவல் மண் அள்ளி வந்ததும், அந்த லாரி சோழவந்தான் தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ மாணிக்கத்திற்கு சொந்தமான லாரி என்பதும் தெரிய வந்தது.கிராவல் மண்ணுடன் லாரியை பறிமுதல் செய்த வருவாய்த்துறையினர், அதனை வாடிப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். வருவாய்த்துறையினர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள வாடிப்பட்டி போலீசார், லாரியை ஓட்டி வந்த மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சவுந்திரபாண்டியை (52) கைது செய்தனர். லாரி உரிமையாளர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிய அதிமுக முன்னாள் எம்எல்ஏவின் லாரி பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: