உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்; திமுக அரசின் சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுரை

காஞ்சிபுரம்:  உள்ளாட்சி தேர்தலில் காஞ்சிபுரம், உத்திரமேரூர் தொகுதிகளில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டத்தில் தொழில்துறை அமைச்சர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளர் அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டார். காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கினார். எம்பி செல்வம், எம்எல்ஏ எழிலரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம் வரவேற்றார். கூட்டத்தில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது. வரும் உள்ளாட்சித் தேர்தலில் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி.

காஞ்சிபுரம் அண்ணா பிறந்த மண், அண்ணாவுடன் பயணித்த சி.வி.எம்.அண்ணாமலை ஆகியோர் பணியாற்றிய இந்த மண்ணில் பணியாற்ற நல்வாய்ப்பு கிடைத்துள்ளது. காஞ்சிபுரம், உத்திரமேரூர் தொகுதிகளுக்கு உட்பட்ட 3 ஒன்றியங்களின் பெருந்தலைவர்கள் உள்பட திமுக சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் வெற்றிபெற்று அண்ணா அறிவாலயத்துக்கு செல்லவேண்டும். நமக்கு வெற்றி என்பது வெகுதொலைவில் இல்லை. கடந்த சட்டமன்ற தேர்தலில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிமுக, அதிகார பலம், பணபலத்துடன் போட்டியிட்டது. ஆனாலும் மக்கள் அதிமுக கூட்டணியை நிராகரித்து நமது கூட்டணிக்கு மகத்தான வெற்றியை தந்தனர். பதவியேற்ற 4 மாதங்களிலேயே 5 முக்கிய கோப்புகள் உள்பட 202 தேர்தல் வாக்குறுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றினார்.

அதிமுக அரசு 110 விதியின்கீழ் பலதிட்டங்களை அறிவித்தது. ஆனால் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. இதுபற்றி சட்டமன்றத்தில் கேட்டபோது அதிமுக வாய்மூடி மௌனமாக இருந்தது. திமுக அரசு பதவியேற்று 4 மாதங்களில் மக்களின் நம்பிக்கையை பெற்றிருக்கிறோம். எதிர்க்கட்சிகள் சிதறி கிடக்கின்றனர். எனவே, திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வீடுவீடாக சென்று திமுக அரசின் மக்கள் நலத்திட்டங்கள், சாதனைகளை சொல்லி வாக்கு சேகரிக்க வேண்டும் என்றார்.

Related Stories: