ஆளும் கட்சி தலைவர் தேர்தலில் வெற்றி; ஜப்பானின் புதிய பிரதமர் கிஷிடா: வரும் 4ம் தேதி பதவியேற்பு

டோக்கியோ: ஜப்பான் பிரதமராக இருந்து ஷின்சோ அபே உடல் நலக்குறைவு காரணமாக கடந்தாண்டு பதவி விலகினார். அவரைத் தொடர்ந்து, யோஷிகிடே சுகா பிரதமரானார். ஆனால், இவர் கொரோனாவை கையாண்ட விதம், தொற்றின் போது ஜப்பானில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளை நடத்தியது போன்ற காரணங்களால் மக்கள் அதிருப்தி அடைந்தனர். இதனால், கட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அவர் அறிவித்தார். ஜப்பானை பொருத்தவரை ஆளுங்கட்சியின் தலைவராக இருப்பவரே, அந்நாட்டின் பிரதமராக பொறுப்பேற்பார்.

இதனால், ஆளுங்கட்சியான சுதந்திர ஜனநாயகக் கட்சிக்குள் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில், இந்நாட்டின் முன்னாள் வெளியுறவு அமைச்சரான புமியோ கிஷிடா, தடுப்பூசி துறை அமைச்சர் தாரோ கோனோ போட்டியிட்டனர். இதில், கிஷிடா 257 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். கோனோ 170 வாக்குகள் பெற்றார். இதையடுத்து, அக்டோபர் 4ம் தேதி நாடாளுமன்றத்தில் முறைப்படி கட்சியின் தலைவராக கிஷிடா பொறுப்பேற்க உள்ளார். அதே நாளில் புதிய பிரதமராகவும் பொறுப்பேற்பார் என்று தெரிகிறது.

Related Stories: