சிலம்ப கலை தோன்றிய இடத்தை ஆராய விரைவில் குழு: அமைச்சர் மெய்யநாதன் பேட்டி

தண்டையார்பேட்டை: தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்ப கலை தமிழகத்தில் எங்கு தோன்றியது என ஆய்வு செய்ய விரைவில் குழு அமைக்கப்படும் என விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் கூறினார். சிலம்ப விளையாட்டை மத்திய அரசின் கேலோ இந்தியா திட்டத்தில் இணைக்க தமிழக அரசு முழு முனைப்பு காட்டியதற்கு சிலம்ப வீரர்கள் சார்பில் பாராட்டு விழா சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று நடத்தப்பட்டது.

இதில், சிறு குழந்தைகள், பள்ளி மாணவர்கள், சிலம்ப கலை வீரர்கள் என அனைவரும் சிலம்பம் சுழற்றியும், தீ வளையத்துக்குள் நுழைந்தும் பல்வேறு சாகசங்களை செய்து காண்பித்தனர்.

நிகழ்ச்சியில் விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அப்போது, சாகச நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசுகையில், தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பத்தை தமிழக அரசு உலகறிய செய்யும்.

தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்ப கலை தமிழகத்தில் எங்கு தோன்றியது, எப்படி தோன்றியது என ஆய்வு செய்ய விரைவில் உயரதிகாரிகள் குழு அமைக்கப்படும். சிலம்ப விளையாட்டு வீரர்களுக்கு தமிழக அரசு வேலையில் 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் சிலம்ப விளையாட்டை கற்று கொடுக்க நடவடிக்கைகள் எடுப்பதோடு வட சென்னையில் சிலம்ப விளையாட்டிற்கு என பிரத்யேக மைதானம் அமைக்கப்படும்’ என்றார்.

Related Stories: