காரைக்காலில் கோயில்களில் கொள்ளையடித்த 2 கூட்டாளிகள் கைது

காரைக்கால் : காரைக்காலில் கோயில்களில் கூட்டாக சேர்ந்த கொள்ளையடித்த இருவரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.காரைக்கால் நகர காவல் சரகத்திற்குட்பட்ட என்.எஸ்.சி போஸ் தெருவில் உள்ள உஜ்ஜைனி காளியம்மன் கோயில் உண்டியல் கடந்த 19ம் தேதி காலை காணாமல்போனது. புகாரின்பேரில் காரைக்கால் நகர போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். உண்டியலை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் அதிலிருந்த 10 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு உண்டியலை கோயிலின் பின்புறமுற்ற ஆற்றின் கரையில் வீசி சென்றுள்ளது தெரிந்தது. இதேபோல் கடந்த 17ம்தேதி காரைக்கால் கருக்களாச்சேரியில் உள்ள ஏழை மாரியம்மன் கோயிலில் மேற்கூரையை பிரித்து உள்ளே இறங்கிய கொள்ளையர்கள் அம்மன் கழுத்திலிருந்த 1 கிராம் எடை கொண்ட 2 தங்க நாணயங்கள் மற்றும் வெள்ளி கொலுசை கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து நிரவி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இரு வழக்குகள் தொடர்பாகவும் காரைக்கால் சிறப்பு அதிரடிப்படையினர் ரகசியமாக தேடுதல் வேட்டையை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் கொள்ளையர்கள் பேருந்தில் வருவதாக சிறப்பு அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அதன் எஸ்.ஐ.பிரவீன்குமார் அளித்த தகவலின் பேரில் நகர காவல் எஸ்.ஐ பெருமாள் காரைக்கால் மதகடி என்னுமிடத்தில் சோதனையில் ஈடுபட்டார். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் பேருந்தில் வந்திறங்கிய 2 பேரை விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கொடுத்துள்ளனர். இதையடுத்து காவல்நிலையம் அழைத்து வந்து விசாரித்த போது காரைக்காலில் இரு கோயில்களிலும் மற்றும் நாகை கோட்டைவாசல் பகுதியில் உள்ள காளியம்மன் கோயிலிலும் இவர்கள் கூட்டாக கொள்ளையடித்தது தெரியவந்தது.

ஆனால் அங்கிருந்த உண்டியலில் குறைவான பணமிருந்ததால் அதுகுறித்து வழக்குபதியவில்லை. இதனால் அடுத்தடுத்த கோயில்களிலும் சுதந்திரமாக இவர்கள் கொள்ளையடித்துள்ளனர். இவர்களின் குறி சிறிய கோயில்கள் மட்டுமே. திருடியதை கூட்டாளிகள் இருவரும் ஒப்பு கொண்டதையடுத்து நாகை மாவட்டம் நாகூர் தெற்குத்தெரு பகுதியை சேர்ந்த அப்துல்ரஹீம் மகன் ஆசிக் (எ) பாரூக் (25), கீழ்வேளுர் வடக்காளத்தூர் வடக்குத்தெருவை சேர்ந்த பாரதி மகன் முத்து(எ) மாரிமுத்து ஆகிய இருவரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்து சுமார் 8 ஆயிரம் மதிப்புள்ள 2 தங்க நாணயங்கள் மற்றும் 2 ஆயிரம் ரூபாய் சில்லரை மற்றும் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

இதில் ஆசிக் (எ) பாரூக், திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் வழிப்பறி வழக்கிலும், நாகூரில் குடித்துவிட்டு அநாகரீகமாக நடந்துகொண்ட வழக்கிலும், திருப்பட்டினத்தில் ஒரு வழக்கிலும் என திருச்சி, நாகை, காரைக்கால் சிறையில் இருந்துள்ளான். கைது செய்யப்பட்டுள்ள இருவரும் காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

சுள்ளான்

நாகை மீன் இறங்குதளத்தில் ஐஸ் ஏற்றும் பணிக்கு சென்றபோது ஆசிக் (எ) பாரூக் மற்றும் முத்து (எ) மாரிமுத்துவும் கூட்டாளியாகியுள்ளனர். ஆசிக்ன் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ள நிலையில் மாரிமுத்துக்கு இது முதல் வழக்கு. இரண்டுபேருக்கும் ஊரில் ‘சுள்ளான்’ என்று பெயராம்.

Related Stories: