காட்பாடியில் தேர்தல் அலுவலருக்கு மிரட்டல் அதிமுக நிர்வாகிகள் 3 பேர் அதிரடி கைது

வேலூர்: காட்பாடியில் தேர்தல் அலுவலரை மிரட்டிய அதிமுக மாவட்ட செயலாளர் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு  செய்துள்ளனர். அவர்களில் 3 பேர் கைது செயய்யப்பட்டனர். இதே போல கள்ளக் குறிச்சியில் உதவி தேர்தல் அலுவலரை தாக்கிய அதிமுக ஒன்றிய செயலாளர் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்.6 மற்றும் 9 ஆகிய தேதிகளில்  நடக்கிறது. இந்நிலையில் வேலூர் மாவட்டம் காட்பாடி பிடிஓ அலுவலகத்தில் காட்பாடி ஒன்றியக்குழு 8வது வார்டுக்கு அதிமுக சார்பில் அம்பிகாவும், அவருக்கு மாற்றாக ரேவதி என்பவரும் மனு செய்திருந்தனர். இதில் மாற்று வேட்பாளர் ரேவதி, கடந்த 24ம் தேதி மனுவை வாபஸ் பெறுவதற்கான படிவத்தை வழங்கியதாகவும், வேட்பாளர் அம்பிகாவும் ஒரு படிவத்தில் கையெழுத்திட்டு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் அம்பிகாவின் மனு வாபஸ் பெறப்பட்டதாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மூலம் அதிமுகவினருக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து அங்கு மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு தலைமையில் அதிமுகவினர் வந்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது மாவட்ட திமுக செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்எல்ஏ தலைமையில் திமுகவினரும் திரண்டனர். இருதரப்புக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவர்களை போலீசார் விலக்கி விட்டனர்.

இந்நிலையில் உதவி தேர்தல் அலுவலர் மோகனுக்கு மிரட்டல் விடுத்தல், ஆவணங்களை பறித்து சென்று அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல், அரசு அலுவலகத்தில் கூட்டம் சேர்த்தல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் அதிமுக மாநகர மாவட்ட செயலாளர் அப்பு உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர். இதில் பகுதி செயலாளர் ஜனார்த்தனன், மாநகர மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் அமர்நாத், முன்னாள் ஒன்றிய செயலாளர் ஆனந்தன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல துணைத்தலைவர் ராஜசேகரை தேடிவருகின்றனர்.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் 11வது வார்டு உறுப்பினர் பதவிக்கு அதிமுக வேட்பாளர் சலேத்மேரிக்கு முன்மொழிந்த வேலு, மனுவை திரும்ப பெறுவதாக உதவி தேர்தல் அலுவலர் சாமிதுரையிடம் நேற்று முன்தினம் மனு வழங்கினார். இதையடுத்து திமுக வேட்பாளர் அலமேலு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அவர் அறிவித்தார். தகவல் அறிந்து கள்ளக்குறிச்சி அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் தேவேந்திரன், வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகர் உள்ளிட்டோர் உதவி தேர்தல் அலுவலர் சாமிதுரையிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அவரை ராஜசேகர் தாக்கியுள்ளார். இதுபற்றி உதவி தேர்தல் அலுவலர் சாமிதுரை புகாரின்படி கள்ளக்குறிச்சி போலீசார், அதிமுக ஒன்றிய செயலாளர் ராஜசேகர் உட்பட சிலர் மீது 4 பிரிவின் கீழ் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>