கோயில் உண்டியல் உடைப்பு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 6வது வார்டு ஜெயஸ்ரீ நகர் பகுதியில் பெரியாண்டவர் கோயில் உள்ளது. இக்கோயிலில் நாள்தோறும் 2 கால பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், பெரியாண்டவர் கோயிலில் பூஜை செய்வதற்காக நேற்று காலை மேட்டு தெருவை சேர்ந்த விக்னேஷ்(27) என்ற பூசாரி வந்திருந்தார். அப்போது கோயிலின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியானார். இதுகுறித்து கிராம பெரியவர்களிடம் தெரிவித்தார். பின்னர் கும்மிடிப்பூண்டி போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சோதனை நடத்தினர். அதில், கோயிலுக்குள் இருந்த உண்டியலை உடைத்து, அதில் பக்தர்கள் காணிக்கையாக போட்டிருந்த ரூ.10 ஆயிரத்துக்கு மேற்பட்ட பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடிய மர்ம கும்பல் குறித்து தீவிரமாக விசாரிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Related Stories:

>