கூட்டணியில் கும்மாங்குத்து: நெல்லையில் இலையை எதிர்த்து தாமரை போட்டி..!

நெல்லை: நெல்லையில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து பாஜ தனது வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளது. இது அதிமுகவினர் மத்தியில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் அதிமுக - பாஜ இடையே கடந்த 2019 மக்களவை தேர்தல் முதல் கூட்டணி தொடர்ந்து வருகிறது. கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடந்த சட்டசபை தேர்தலிலும் இந்த கூட்டணி தொடர்ந்தது. தமிழகத்தில் அதிமுக - பாஜ கூட்டணி காரணமாக 2021 சட்டசபை தேர்தலில் நெல்லை, நாகர்கோவில், கோவை உட்பட 4 தொகுதிகளில் பாஜ வெற்றி பெற்றது. இந்நிலையில், தமிழகத்தில் தற்போது பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலிலும் அதிமுக - பாஜ இடையே கூட்டணி தொடர்ந்து வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் 9 யூனியன்களிலும், தென்காசி மாவட்டத்தில் 10 யூனியன்களிலும் அதிமுக - பாஜ இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டு வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, நெல்லை மாவட்டம், மானூர் யூனியன் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜவுக்கு 3 வார்டுகளும், ஒரு மாவட்ட பஞ்சாயத்து வார்டும் கூட்டணி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அதன்படி 10, 13, 21 ஆகிய 3 யூனியன் வார்டுகளும், மாவட்ட ஊராட்சி 2வது வார்டும் பாஜவிற்கு ஒதுக்கப்பட்டு கூட்டணி ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் மானூர் யூனியனில் 5 வார்டுகளுக்கு பாஜ தனது அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளது. அதற்கான அங்கீகார கடிதத்தையும் பாஜ தலைமை வழங்கியுள்ளது. அதிமுகவிடம் கூட்டணி போட்டு பெறப்பட்ட 10, 13, 21 வார்டுகள் தவிர 9, 14 ஆகிய இரண்டு வார்டுகளிலும் பாஜ தனது வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளது.

9வது வார்டில் அதிமுக அதிகாரப்பூர்வ வேட்பாளர் வேலுமயிலை எதிர்த்து பாஜ சார்பில் இந்துமதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இதேபோல 14வது வார்டில் அதிமுக வேட்பாளர் உச்சிமாகாளியை எதிர்த்து பாஜ வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார். ஒரே வார்டில் அதிமுக - பாஜ வேட்பாளர்கள் போட்டியிடுவது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பாஜவின் இந்த கூட்டணி ஒப்பந்தம் மீறிய செயல் அதிமுகவினர் மத்தியில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அதிமுக - பாஜ கூட்டணி இடையே விரிசல் உருவாகியுள்ளது. ஏற்கனவே கடந்த சட்டமன்ற தேர்தலில் நெல்லை சட்டமன்ற தொகுதியை பாஜவிற்கு தாரை வார்த்து விட்ட நிலையில், தற்போது உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜ வேட்பாளர்கள் போட்டியிடுவதால் அதிமுகவினர் கொதிப்படைந்துள்ளனர். இதேபோல ராதாபுரம் யூனியனிலும் கூட்டணி ஒப்பந்தத்தை மீறி பாஜ அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் போட்டியிடுவதாக புகார் எழுந்துள்ளது.

Related Stories: