குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோயில் காவிரி ஆற்று கடம்பன் துறை படிக்கட்டு சீரமைக்க வேண்டும்: மக்கள் வலியுறுத்தல்

குளித்தலை: குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோயில் காவிரி ஆற்று கடம்பன்துறை படிக்கட்டு சீரமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.காசிக்கு அடுத்து வடக்கு நோக்கி இருக்கும் சிவத்தலங்களில் பிரசித்தி பெற்றதாக குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சற்று தூரம் எதிரே ஆற்றுப்பகுதியில் கடம்பன் துறை உள்ளது இந்த கடம்பன்துறை புனிதமாக கருதப்படுவதால் வெளி மாவட்டங்களில் இருந்தும் சுற்றுப்பகுதி வட்டாரங்களிலிருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் காவிரியில் நீராடி செல்வது வழக்கம்.

மேலும் கிராமப்புறங்களில் உள்ள கோயில்களுக்கு திருவிழாக்காலங்களில் பால்குடம், தீர்த்த குடம் ஆகியவற்றை இந்த கடம்பன் துறையில் இருந்து தான் எடுத்துச் செல்வார்கள். மேலும் ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று எட்டுஊருசாமிகள் கடம்பன் துறையில் சந்திப்பு கொடுத்து தீர்த்தவாரி நடைபெறும். அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த கடம்பன் துறைக்கு வந்து செல்வார்கள். அப்போது பழுதடைந்த இந்த படிக்கட்டுகளுக்கு மணல் மூட்டைகளை வைத்து சரி செய்து கொள்வார்கள். அதன் பிறகு நாளாக நாளாக மூட்டைகள் காணாமல் போய் அந்த பகுதி பள்ளமாகி விடும்.

அதுமட்டுமல்லாது முன்னோர்களுக்கு அமாவாசை, ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய ஏராளமானோர் இங்கு வந்து செல்வது வழக்கம். அப்போது இந்த கடம்பந்துறை படிக்கட்டு வழியாகத்தான் காவிரி ஆற்றில் இறங்கி நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடம்பந்துறை படிக்கட்டுகள் மோசமானதால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை படிக்கட்டு துறையில் ஏறி இறங்கி செல்வது சிரமமாக உள்ளது.

இந்நிலையில் தினந்தோறும் ஒரு சிலர் தவறி விழும் நிலையும் ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு புனிதமாக கருதப்பட்டு வரும் குளித்தலை கடம்பன் துறையில் பழுதடைந்த படிக்கட்டை புதிதாக கட்டித்தர ஆற்று பாதுகாப்பு பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: