திருவாடானை- தோட்டாமங்கலம் சாலையில் மழை பெய்தாலே மூழ்கும் தரைப்பாலம்-மேம்பாலம் அமைக்க கோரிக்கை

திருவாடானை : திருவாடானை- ேதாட்டாமங்கலம் சாலையில் உள்ள தரைப்பாலம் அதிக மழை பெய்தாலே தண்ணீரில் மூழ்கி விடுகிறது. இதனால் போக்குவரத்து வசதியின்றி பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். திருவாடானையில்  இருந்து சூச்சனி, திருவடிமதியூர், தோட்டாமங்கலம் ஆகிய கிராமங்களுக்கு பல  ஆண்டுகளுக்கு முன்பே தார்ச்சாலை அமைக்கப்பட்டு பஸ் போக்குவரத்தும்  இருந்தது.  அதன்பின் சாலையில் குறிப்பிட்ட தொலைவிற்கு மிக மோசமாக  இருந்ததால் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இந்த சாலையில் சூச்சனி அருகே  மணிமுத்தாறு கிளையின் வரத்து கால்வாய் செல்கிறது. இக்கால்வாய் வழியே அதிக  மழை பெய்யும் போது தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். இதற்காக கால்வாயின்  குறுக்கே 50 ஆண்டுகளுக்கு முன்பாக தரை பாலம் ஒன்று அமைக்கப்பட்டது.வௌ்ளம்  பெருக்கெடுத்து செல்லும்போது தரை பாலத்தின் மேலே தண்ணீர் பரவி கொண்டு  ஓடும். அச்சமயம், அங்குள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் அவசர தேவைகளுக்கு  திருவாடானை வந்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே இந்த தரை  பாலத்தை அகற்றி மேம்பாலமாக கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து  தோட்டாமங்கலம் கிராமமக்கள் கூறுகையில், ‘இந்தசாலையை நம்பி 5க்கும்  மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த வழியாக வந்துதான் திருவாடானை மற்றும்  வெளியூர்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. பள்ளி- கல்லூரி மாணவர்கள்,  விவசாயிகள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் இந்த தரை பாலத்தை கடந்து  தான் செல்ல வேண்டும்.

மழை காலங்களில் அதிகளவில் தண்ணீர் வரும்போது  செல்ல  முடியாத நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் அனைவரது நலன் கருதி இந்த  பாலத்தை அகற்றிவிட்டு மேம்பாலம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’  என்றனர்.

Related Stories: