மினி பூங்கா, ஓய்வறைகள் என பல்வேறு வசதிகளுடன் அமைப்பு; புதுப்பொலிவுடன் நெல்லை புதிய பஸ் நிலையம்: பணிகள் முடிந்ததால் விரைவில் திறக்க வாய்ப்பு

நெல்லை: நெல்லை வேய்ந்தான்குளம் புதிய பஸ் நிலைய விரிவாக்கப்பணிகள் முடிந்த நிலையில் விரைவில் திறக்கப்பட உள்ளது. கூடுதல் பஸ்களை நிறுத்த வசதி, பிரமாண்ட தகவல் தொலைக்காட்சி ஸ்கிரீன் போன்ற பல்வேறு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. நெல்லை மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்ட விரிவாக்கப்பணிகள் சுமார் 990 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வருகின்றன. சந்திப்பு பெரியார் பஸ் நிலையம் முழுமையாக இடித்துவிட்டு நவீன வசதிகளுடன் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இதுபோல் பாளை பஸ் நிலையமும் இடித்து அகற்றிவிட்டு புதிய வசதிகளுடன் கட்டப்படுகிறது. வேய்ந்தான்குளத்தில் உள்ள புதிய பஸ் நிலையத்திலும் கூடுதல விரிவாக்கப்பணிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக இங்கு வந்து சென்ற பஸ்கள் அருகே ஆம்னி பஸ் நிலையம் மற்றும் பெருமாள்புரம் போலீஸ் நிலையம் எதிரே உள்ள மைதானத்தில் இருந்து தற்காலிகமாக இயக்கப்படுகின்றன. வேய்ந்தான்குளம் புதிய பஸ்நிலைய விரிவாக்கப்பணிகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மும்முரமாக நடந்துவந்தன.

தற்போது பெரும்பாலான பணிகள் நிறைவுபெற்றுள்ளதால் புதுப்பொலிவுடன் திறப்பு விழாவுக்காக காத்திருக்கிறது. புதுப்பிக்கப்பட்ட பஸ் நிலையத்தில் ஏற்கனவே 4 பிளாட்பாரம் இருந்த நிலையில் தற்போது இது 6 பிளாட்பாரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் கூடுதல் பஸ்களை நிறுத்த முடியும். பண்டிகை காலங்களில் அதிக பஸ்கள் இயக்கப்பட்டாலும் போக்குவரத்து நெரிசலின்றி செல்லமுடியும். பிளாட்பார பாந்துகளில் இருந்து பஸ்களை எடுத்து திருப்பி செல்லும் பகுதியில் அழகிய மினி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

மையப்பகுதி நடைமேடைகளில் 2 மெகா சைஸ் ஸ்கிரீன் டிவி அமைக்கப்பட்டுள்ளது. இதில் தகவல் விபரங்கள் தெரிவிக்கப்படும். நவீன இருக்கைகள், அகலமான பிளாட்பாரம், சுகாதாரமான கழிப்பறைகள், கூடுதல் கடைகள், ஓய்வு அறைகள் உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இங்கு சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் ரூ.14 கோடி மதிப்பில் நவீன பல அடுக்கு வாகன நிறுத்தமும் அமைக்கப்பட்டுள்ளது. புதிய பஸ்நிலையத்தில் பெரும்பாலான பணிகள் முடிந்த நிலையில் விரைவில் திறக்கப்பட வாய்ப்புள்ளது.

இந்த பஸ் நிலையம் திறக்கப்பட்ட பிறகு தற்காலிக பஸ்நிலையத்தில் தற்போது இருந்துவரும் போக்குவரத்து நெரிசல், வசதி குறைவு போன்ற பல்வேறு பிரச்னைகளில் இருந்து பயணிகள் விடுபடுவர்.

Related Stories: