வனத்துறை நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் இடித்து அகற்றம்

பாலக்கோடு : பாலக்கோடு அடுத்த பிக்கனஹள்ளி முத்தம்மாள்பள்ளம் பகுதியில், வனத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் இடித்து அகற்றப்பட்டது.

 தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த பிக்கனஹள்ளி முத்தம்மாள் பள்ளம் பகுதியை சேர்ந்த சின்னசாமி (60), கோவிந்தராஜூ (55) ஆகியோர் வசித்து வருகின்றனர். கோவிந்தராஜ் குடியிருக்கும் இடத்தில் போர்வெல் அமைத்து, அதற்கு மின் இணைப்பு கோரி விண்ணப்பித்துள்ளார்.

வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கோவிந்தராஜூக்கு எப்படி மின் இணைப்பு வழங்க முடியும் என?  சென்னை உயர்நீதிமன்றத்தில் சின்னசாமி வழக்கு தொடர்ந்துள்ளார். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தும்படி, வனத்துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த விசாரணையில், சின்னசாமி, கோவிந்தசாமி ஆகிய இருவருமே  வனத்துறைக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து, அதில் வீடு கட்டி வசித்து வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டியிருக்கும் வீடுகளை அகற்றும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து நேற்று, டி.எஸ்.பி.,தினகரன், தாசில்தார் அசோக்குமார், வனசரகர் செல்வம் ஆகியோர் முன்னிலையில், போலீஸ் பாதுகாப்புடன்  வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டியிருந்த வீடுகள் பொக்லைன் மூலம் இடித்து அகற்றப்பட்டது.

Related Stories: