ஜார்க்கண்ட் மாநிலத்தில் நீதிபதி உத்தவ் ஆனந்த் உயிரிழந்தது குறித்து சிபிஐ இடைக்கால அறிக்கை தாக்கல்..!!

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் நீதிபதி உத்தவ் ஆனந்த் உயிரிழந்தது குறித்து சி.பி.ஐ. இடைக்கால அறிக்கை தாக்கல் செய்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைப்பயற்சியில் ஈடுபட்டிருந்த மாவட்ட நீதிபதி, திட்டமிட்டு வேண்டுமென்றே ஆட்டோவால் மோதி கொல்லப்பட்டுள்ளதாக, உயர்நீதிமன்றத்தில், சி.பி.ஐ. தெரிவித்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாதைச் சேர்ந்த மாவட்ட நீதிபதி உத்தவ் ஆனந்த், இவர் ஜூலை 28ம் தேதி நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, ஆட்டோ மோதி உயிரிழந்தார்.

மேலும், முதலில் விபத்தாக கருதப்பட்ட இந்த சம்பவத்தில், அவர் மீது ஆட்டோ ஒன்று மோதியது தொடர்பான கண்காணிப்பு கேமரா பதிவுகள் வெளியாகின. வேகமாக சென்ற ஆட்டோ, நீதிபதி மீது மோதி, நிற்காமல் தப்பிச் சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உச்ச நீதிமன்றமும் கவலை தெரிவித்திருந்தது.இந்த மரணம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. விசாரணை தாமதமாக நடப்பதாக, ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தது. இந்நிலையில் சி.பி.ஐ., சார்பில் விசாரணையின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அதில் கூறப்பட்டுள்ளதாவது: சம்பவம் நடந்த இடம், கண்காணிப்பு கேமரா பதிவுகள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டன. ஆதாரங்களின்படி, ஆட்டோ டிரைவர் திட்டமிட்டு, வேண்டுமென்றே நீதிபதி மீது மோதியது உறுதி செய்யப்பட்டு உள்ளது.கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>