திருவெற்றியூர் கண்மாயில் குளித்தால் அரிப்பு : குளிக்க முடியாமல் மக்கள் தவிப்பு

திருவாடானை : கண்மாயில் சுண்டி கீரை என்னும் ஒருவகை செடி படர்ந்து கிடப்பதால் குளிக்கும் போது உடல் முழுவதும் அரிப்பு ஏற்படுகிறது. இதனால் கிராம மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். திருவாடானை அருகே திருவெற்றியூரில் பெரிய பாசன கண்மாய் உள்ளது. இந்த கண்மாயை நம்பி 600 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. கடந்த ஆண்டு பருவ மழை அதிகமாக பெய்ததால் விவசாயத்திற்கு போக மீதம் அரை கண்மாய்க்கு மேல் தண்ணீர் தேங்கி இருக்கிறது. கோடைகாலத்தில் கண்மாய் தண்ணீரில் குளிப்பதை இப்பகுதி மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த கண்மாயில் சுண்டி கீரை எனும் ஒருவகைச் செடி கண்மாய் தண்ணீரில் மிதந்து பெரும்பான்மையான தண்ணீர் நிற்கும் இடங்களை ஆக்கிரமித்து விட்டது. இந்த செடி படர்ந்து கிடப்பதால் கண்மாயில் இறங்கி குளிப்பதற்கு சிரமமாக உள்ளது. இருப்பினும் அதையும் பொருட்படுத்தாமல் தண்ணீரில் இறங்கி குளிக்கும்போது உடல் முழுவதும் அரிப்பு ஏற்படுகிறது. இதனால் கிராம மக்கள் குளிக்க சிரமப்பட்டு வருகின்றனர்.

கிராம பொதுமக்கள் கூறுகையில், போதிய பருவமழை பெய்யாமல் விவசாயத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை வரும். ஆனால் கடந்த ஆண்டு பருவ மழை அதிகமாக பெய்ததால் கண்மாயில் அதிகளவில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இன்னும் கிராமங்களில் கண்மாய் குளங்களில் மூழ்கி குளிப்பது பெரிதும் விரும்புகின்றனர்.

இந்த ஆண்டு இவ்வளவு தண்ணீர் இருந்தும் எங்களால் குளிக்க முடியவில்லை.

 காரணம் தண்ணீர் முழுவதும் ஒரு வகை செடி படர்ந்து கிடக்கிறது. இந்த செடியை சுண்டி கீரை என்கிறார்கள். இதில் இறங்கி குளித்தால் உடல் முழுவதும் அரிப்புடன் தடிப்பு ஏற்படுகிறது. பின்னர் மருத்துவரிடம் சென்று தான் சரி செய்ய வேண்டியுள்ளது. இதுபோன்று கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது. பொதுப்பணித்துறை சார்பில் அந்த செடிகளை அகற்றி கொடுத்தனர். எனவே இப்போதும் பொதுப்பணி துறை அதிகாரிகள் கண்மாயை பார்வையிட்டு இந்த செடிகளை அகற்றினால் கிராம மக்களுக்கு உதவியாக இருக்கும் என்றனர்.

Related Stories: