அரையாடைக்கு மாறிய நிகழ்வின் நூற்றாண்டு விழா மதுரையில் மகாத்மாவுக்கு மரியாதை

மதுரை: தேசப்பிதா காந்தியடிகள், 1921, செப். 22ல் மதுரையில் அரையாடைக்கு மாறினார். அதன் நூற்றாண்டு விழாவை ஒட்டி மதுரையில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. காந்தியடிகள் அரையாடைக்கு மாறியதும் பேசிய பொதுக்கூட்டம் நடந்த காந்தி பொட்டல் என்ற இடத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழக வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, கலெக்டர் அனீஷ்சேகர், மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன், எம்எல்ஏ பூமிநாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலமாசி வீதியில் காந்திஜி தங்கியிருந்த வீடு, தற்போது கதர் விற்பனை நிலையமாக உள்ளது. அங்கும் காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

காந்தி மியூசியத்தில் நடந்த விழாவில் ஐகோர்ட் நீதிபதி புகழேந்தி சிறப்பு மலர் வெளியிட, முதல் பிரதியை காந்தி அமைதி நிறுவன தலைவர் குமார் பிரசாந்த் பெற்றுக்கொண்டார். மகாத்மாவின் பேத்தி தாரா காந்தி பட்டாச்சார்யா, கொள்ளுப்பேரன் விதூர் பேசினர். ‘‘காந்தியை மாற்றிய தமிழ்நாடு’’ என்ற தலைப்பில் மதுரை உலகத்தமிழ் சங்க அரங்கில் பேராசிரியர் சாலமன் பாப்பையா உள்ளிட்டோர் பங்கேற்ற நிகழ்ச்சி நடந்தது. 100 சிறுவர்கள் காந்தி முகமூடி அணிந்து ஊர்வலம் நடத்தினர்.

* ‘‘தமிழக அரசு உதவுகிறது...’’காந்திஜி பேத்தி பாராட்டு

காந்தியடிகளின் பேத்தி தாரா காந்தி பட்டாச்சார்யா அளித்த பேட்டி: விடுதலை பெற்ற இந்தியாவில் இன்றைக்கும் பல்வேறு அச்சுறுத்தல்கள் இருக்கிறது. அச்சமின்றி வெளியில் சென்று வருவது இயலாத காரியமாக இருக்கிறது. தமிழக அரசு காந்திய சிந்தனைகளை மக்களிடம் கொண்டு செல்வதற்கு பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது. குறிப்பாக மதுரையிலுள்ள காந்தி நினைவு அருங்காட்சியகத்தின் புனரமைப்பிற்கு நிதியுதவி செய்துள்ளது. தமிழக அரசு பெரியாரின் பிறந்த நாளை சமூகநீதி நாளாக அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். ஒவ்வொருவருக்குள்ளும் சமூகநீதி தத்துவம் பிறக்க வேண்டும். அப்போதுதான் அரசின் எண்ணம் ஈடேறும். கொரோனா பெருந்தொற்றை காந்தியடிகளின் எளிமையான, அன்பான வாழ்க்கை முறையின் மூலம் நாம் வென்றுவிடலாம் என்றார்.

Related Stories: