மாவட்டம் முழுவதும் தேர்தல் பாதுகாப்பு பணியில் 1400 போலீசார்: எஸ்பி விஜயகுமார் பேட்டி

திருப்போரூர்: மாவட்டம் முழுவதும் தேர்தல் பாதுகாப்பு பணியில் 1400 போலீசார் ஈடுபட உள்ளனர் என எஸ்பி விஜயகுமார் தெரிவித்தார். திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்தில் 50 ஊராட்சி மன்ற தலைவர், 22 ஒன்றிய கவுன்சிலர்கள், 2 மாவட்ட கவுன்சிலர்கள் பதவிக்கான தேர்தல் வருகிற அக்டோபர் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுக்கள் விநியோகம் மற்றும் வேட்பு மனு தாக்கல் போன்றவை கடந்த 15ம் தேதி முதல் தொடங்கியது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று காலை முதலே ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்ய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வந்தனர்.

கடைசி நாளான நேற்று வரை 2 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு 28 பேர், 22 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு 146, ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கு 269 பேர், 381 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 1402 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இறுதி நாளான நேற்று ஏராளமானோர் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்ததால் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் மனுக்கள் இன்று காலை 10 மணிமுதல் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

இந்நிலையில், திருப்போரூர் ஒன்றிய அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல்  நடந்தபோது பாதுகாப்பு பணிகளை செங்கல்பட்டு எஸ்பி விஜயகுமார் நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர், செய்தியாளர்களிடம் கூறுகையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை அமைதியுடன் நடத்தி முடிக்க காவல்துறை உறுதி எடுத்துள்ளது. பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் காவல் துறையினருக்கும், அரசு ஊழியர்களுக்கும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் 300க்கும் மேற்பட்ட பதற்றமான பகுதிகளும், 140 வாக்குச்சாவடிகளில் தகராறு அல்லது பாதிப்பு ஏற்படலாம் என கண்டறிந்துள்ளோம்.

இந்த இடங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்படும். மாவட்டம் முழுவதும் தேர்தல் பாதுகாப்பு பணியில் 1400 போலீசார் ஈடுபட்டுள்ளனர். பிரசாரத்தின்போது சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்யப்படும். மேலும், தேர்தல் விதி மாறாக வாக்காளர்களுக்கு பணம், பொருள் வழங்கினால் நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் மூலமாக 24 மணிநேர பறக்கும் படையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் தங்களுக்கு கிடைத்த தகவல்களை வாட்ஸ்அப் மூலம், காவல்துறைக்கு தெரிவிக்கலாம். அவர்களது பெயர், விபரம் பாதுகாக்கப்படும். தேர்தல் அமைதியான முறையில் நடைபெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

Related Stories: