வாணியம்பாடியில் நள்ளிரவு கனமழையால் மரம் விழுந்து வாகனம் சேதம்-மின்கம்பிகளும் அறுந்து விழுந்தது

வாணியம்பாடி : வாணியம்பாடியில் நள்ளிரவில் பெய்த கனமழையால் சாலையோர மரம் விழுந்து வாகனம் சேதம் அடைந்தது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான ஆலங்காயம், நிம்மியம்பட்டு, வெள்ளக்குட்டை, உள்ளிட்ட இடங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு தொடங்கி விடிய விடிய கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் ஆலங்காயத்திலிருந்து காவலூர் செல்லும் சாலையோரம் உள்ள  சுமார் 50 ஆண்டுகள் பழமையான மரம் விழுந்தது.

அப்போது, காவலூரிலிருந்து ஆலங்காயம் நோக்கி வந்த மினி லாரி சிக்கி லாரி சேதம் அடைந்தது. இதில், லாரி ஓட்டுனர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மேலும் உயர் அழுத்த மின் கம்பிகள் அறுந்து சாலையில் விழுந்தது.இதனால் ஆலங்காயத்தில் இருந்து காவலூர் செல்லும் சாலையில்  போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த ஆலங்காயம் போலீசார் மற்றும் வனத்துறையினர்,  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை ஜேசிபி மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் மின் ஊழியர்கள் மின் கம்பிகளை சரி செய்தனர்.

Related Stories: