ஆம்பூர் அருகே தொடர் கனமழை பாலாற்றில் வெள்ளப்பெருக்கால் தரைப்பாலம் மூழ்கியது-போக்குவரத்து துண்டிப்பு

ஆம்பூர் : ஆம்பூர் அருகே தொடர் மழை காரணமாக மலட்டாறு, கானாறுகள் மற்றும் பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

ஆம்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து இரவில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆம்பூர் வனசரகத்திற்குட்பட்ட காடுகளில் தொடர்மழை காரணமாக கானாறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளக்கல் கானாற்றில் ஏற்பட்ட வெள்ளம் கரை புரண்டு ஒடுவதால் ஆம்பூர் அடுத்த ஆலாங்குப்பத்தில் ஜேசிபி உதவியுடன் கானாற்றில் உள்ள புதர்கள் அகற்றும் பணி நடந்து வருகிறது.

மிட்டாளம், கரும்பூர், சின்னவரிக்கம், நரியம்பட்டு ஆகிய சுற்றுப்பகுதிகளில் தொடர்மழையால் மலட்டாற்றில் நேற்றுமுன்தினம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலத்தில் நீர் வழிந்தோடியது. இந்நிலையில், பெரும் வெள்ளம் ஏற்பட்டு தரைப்பாலத்தில் மீது வாகனங்கள் செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாலத்தின் இருபுறமும் உம்ராபாத் போலீசார் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.

கடந்த 19ம் தேதி பாலாற்றில் குளிக்க சென்ற வாலிபர் பலியானதால், பாலாற்றில் யாரும் இறங்கவோ, குளிக்கவோ கூடாது என போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்த மலட்டாற்றின் வெள்ளம் ஆம்பூர் அடுத்த பச்சகுப்பத்தில் பாலாற்றில் இணைவதால் பாலாற்றில் உள்ள குடியாத்தம், மேல்பட்டி செல்லும் தரைப்பாலம் முழுவதுமாக மூழ்கியது. இதன் காரணமாக நரியம்பட்டு, பச்சகுப்பம் ஆகிய தரைப்பாலங்கள் வழியாக செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், மாதனூர் அருகே பாலாற்றிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாணியம்பாடி: கனமழையால் திம்மாம்பேட்டை, ஆவாரம்குப்பம், அம்பல்லூர், கொடையாஞ்சி வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் செல்லக்கூடிய பாலாற்றில் வெள்ளநீர் அதிகரித்துள்ளது.

மேலும் வாணியம்பாடி நகர பகுதியில் பெய்த மழையின் காரணமாக பல இடங்களில் தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கி நின்றது, கால்வாய்களில் பெருமளவு அடைப்பு ஏற்பட்டது.  ஆற்றுமேடு என்ற  பகுதியில் உள்ள சிறு பாலத்தின் ஒரு பகுதி உடைந்து சரிந்துவிட்டது, இதேபோல் மலங்கு ரோடு பகுதியில் சாலை முழுவதும் மழைநீர் தேங்கியும்,  கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டது.

இதனை அறிந்த வாணியம்பாடி தொகுதி எம்எல்ஏ செந்தில்குமார் நேரில் சென்று கால்வாய்களில் அடைப்பு ஜே.சி.பி எந்திரம் வைத்து சீரமைத்து,   தூர்வாரி தண்ணீர் செல்லவும், ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாய்களில் தண்ணீர் செல்ல நடவடிக்கை மேற்கொண்டார்.

Related Stories: