ஹவானா சிண்ட்ரோம் அறிகுறியால் பாதிப்பு அமெரிக்க உளவு அதிகாரி மீது இந்தியாவில் மர்ம தாக்குதல்: ரஷ்யா மீது சந்தேகம்

வாஷிங்டன்: இந்தியா வந்து திரும்பிய அமெரிக்க உளவுத்துறை (சிஐஏ) அதிகாரி மீது நடத்தப்பட்ட மர்ம தாக்குதலால், ‘ஹவானா சிண்ட்ரோம்’ எனப்படும் நோய் ஏற்பட்டு இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பல்வேறு உலக நாடுகளில் பணியாற்றும் அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள், உளவாளிகள், தூதரக அதிகாரிகளை குறிவைத்து நுண் அலை தாக்குதல் நடைபெற்று வருகிறது. கியூபா தலைநகர் ஹவானாவில் பணியாற்றி வந்த அமெரிக்க தூதரக அதிகாரிகள், கடந்த 2016ம் ஆண்டில் முதன் முதலாக இந்த நுண் அலை தாக்குதலுக்கு உள்ளாகினர்.

இந்த தாக்குதலுக்கு உட்படுபவர்களுக்கு காதில் ஏற்றத்தாழ்வுடன் கூடிய ரீங்கார ஒலி, தலைச் சுற்றல், மயக்கம், சோர்வு, வாந்தி, தீவிர தலைவலி, நினைவாற்றல், கண்பார்வை மங்குதல், மூளை நரம்பில் பாதிப்பு உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்படும். இதனால், அவர்களால் நன்றாக பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டு, நாளடைவில் நிரந்தர நோயாளிகளாகவும் மாறி விடுவார்கள். இது, ‘ஹவானா சிண்ட்ரோம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த 7ம் தேதி இந்தியாவுக்கு சிஐஏ இயக்குனர் வில்லியம் பர்ன்ஸ் ரகசியமாக வந்து, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் ஆலோசனை நடத்தி விட்டு சென்றார். இந்த குழுவில் இடம் பெற்ற ஒரு அதிகாரிக்கு தற்போது ‘ஹவானா சிண்ட்ரோம்’ நோய் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற மர்ம தாக்குதல் இந்தியாவில் நடத்தப்பட்டு இருப்பது இதுவே முதல்முறை. இந்தியாவில் ஹவானா சிண்ட்ரோம் பாதிப்பை ஏற்படுத்தியது யார் என்று கேள்வி எழுந்துள்ளது. இது பற்றி தொடர் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.

200 அதிகாரிகளுக்கு பாதிப்பு

* ‘ஹவானா சிண்ட்ரோம்’ நோயை ஏற்படுத்துவதற்கான மர்ம தாக்குதல் பற்றி 2016ம் ஆண்டு முதல் ரகசியமாக விசாரித்து வந்த அமெரிக்க உளவுத்துறை, 2017ல் தான் இது பற்றி வெளிப்படையாக தெரிவித்தது.

* சீனா, ரஷ்யா, ஆஸ்திரியா, ஜெர்மனி உட்பட 7 நாடுகளில் இதுபோன்ற தாக்குதலுக்கு 200க்கும் மேற்பட்ட அமெரிக்க அதிகாரிகள் உள்ளாகி இருக்கின்றனர்.

* கமலா பயணத்தின்போது வியட்நாமிலும் தாக்குதல்

கடந்த மாத இறுதியில் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் வியட்நாம் தலைநகர் ஹனோய் செல்ல இருந்தார். அந்த நேரத்தில், அந்த நாட்டில் உள்ள அமெரிக்க அதிகாரிகள் சிலருக்கு ‘ஹவானா சிண்ட்ரோம்’ பாதிப்பு ஏற்பட்டது. இதனால், அந்த அதிகாரிகளுக்கு மாற்றாக வேறு அதிகாரிகள் அனுப்பப்பட்ட பிறகே, அவர் தனது பயணத்தை மேற்கொண்டார்.

Related Stories: