இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்க பயணத் தடை நீக்கம்: 2 டோஸ் போட்ட சான்று இருந்தால் ‘ஓகே’

வாஷிங்டன்: இந்தியா உள்ளிட்ட நாடுகளின் பயணிகள் வரும் நவம்பர் முதல் அமெரிக்காவிற்கு வரலாம். அவர்கள் இரண்டு டோஸ் போட்டதற்கான சான்றிதழை காட்டினால் போதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டின் தொடக்கத்தில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவியதால், வெளிநாட்டு பயணிகள் அமெரிக்காவிற்குள் நுழைய முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தடை விதித்திருந்தார்.

இந்த தடை தற்போது வரை அமலில் உள்ள நிலையில், அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிவிப்பில், ‘இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இரண்டு டோஸ் தடுப்பூசியும் போடப்பட்டவர்கள் இனி அமெரிக்காவிற்கு வரலாம். அவர்கள், இரண்டு தடுப்பூசி போட்டதற்கான ஆதாரத்தை வைத்திருக்க வேண்டும். அமெரிக்க விமானத்தில் ஏறுவதற்கு முன்பு தடுப்பூசி போட்டதற்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும். இந்தியா, பிரேசில், இங்கிலாந்து, சீனா, ஈரான் மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளை சேர்ந்த பயணிகள், வரும் நவம்பர் தொடக்கத்தில் இருந்து அமெரிக்காவுக்கு வரலாம்.

தடுப்பூசி போடப்பட்டதற்கான ஆதாரத்தை காட்டினால், அவர்களுக்கு தனிமைப்படுத்தல் இருக்காது. அமெரிக்காவிற்கு புறப்பட்டு வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன் எடுத்த, கொரோனா நெகடிவ் பரிசோதனை ரிசல்டை வைத்திருக்க வேண்டும். நெகடிவ் சோதனையின் ஆதாரத்தைக் காட்ட வேண்டும். விதிகளை மீறினால், அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு பயணிகள் தயாராக இருக்க வேண்டும்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜோ பிடன் - மோடி சந்திப்பு

அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் பங்கேற்கும் ‘குவாட்’ கூட்டணி மாநாடு அமெரிக்காவில் நடைபெற உள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பிடன் தலைமையில் வரும் 24ம் தேதி நடக்கும் இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்கார்ட் மோரிஸ் மற்றும் ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா ஆகியோர் பங்கேற்கின்றனர். அப்போது கொரோனா வைரஸ், பருவநிலை மாற்றம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து தலைவர்கள் விவாதிக்க உள்ளனர்.

அன்றைய தினம் ஜோ பிடன் - மோடி சந்திப்பு, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் - மோடி சந்திப்புகள் தனித்தனியாக நடக்கின்றன. மறுநாள் 25ம் தேதி ஐ.நா சபைக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். முன்னதாக ஐ.நா. பொதுசபையின் 76வது அமர்வு நியூயார்க் நகரில் வருகிற 21ம் தேதி (இன்று) முதல் 30ம் தேதி வரை நடக்கிறது. இதில் பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்று பேசுகின்றனர். பிரதமர் மோடி, நாளை இரவு அல்லது நாளை மறுநாள் டெல்லியில் இருந்து புறப்பட்டு, அமெரிக்கா ெசல்லலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.

Related Stories: