வடிகால்களை தூய்மையாக்க நாகையில் மாபெரும் தூய்மை பணி துவக்கம்-பருவமழை பாதிப்பை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை

நாகை : மழைநீர் வடிகால்களில் உள்ள அனைத்து படிவுகளையும் அகற்றும் மாபெரும் முகாம் நாகை கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று தொடங்கியது.

கலெக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது: வடகிழக்கு பருவ மழையினால் குடியிருப்பு பகுதிகளில் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகும் அபாயம் உள்ளது. மழைநீர் தேங்குவதால் டெங்கு மற்றும் மலேரியா நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகும் நிலையும் உள்ளது. மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து உட்புகுவதால் தொற்றுநோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. எனவே எதிர்வரும் வடகிழக்கு பருவமழையினால் ஏற்படும் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்த்திட நேற்று (20ம் தேதி) மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மைப்பணி முகாம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த முகாம் வரும் 25ம் தேதி வரை மாவட்டம் முழுவதும் நடைபெறும். மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் நகரில் உள்ள அனைத்து மழைநீர் வடிகால்களையும் 100 சதவீதம் தூர்வாரப்படவுள்ளது. இதில் நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, குடிநீர்வடிகால்வாரியம், நகராட்சி, பேரூராட்சி, மின்சாரவாரியம் என அனைத்து துறைகளும் தங்களது பகுதியில் உள்ள மழைநீர் வடிகால் வாய்க்கால்களை தூர்வாரி அதில் உள்ள படிவுகளை தூய்மை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வடகிழக்கு பருவமழையின் போது பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கு முன்எச்சரிக்கையாக அனைத்து துறை அலுவலர்களையும் கொண்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது என்றார். நகராட்சி ஆணையர் தேவி, நாகை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கவுதமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: