நத்தம் விஸ்வநாதன் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் ஆண்டி அம்பலம் வழக்கு: தேர்தல் ஆணையம் பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அதிமுக எம்.எல்.ஏ. நத்தம் விஸ்வநாதன் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் ஆண்டி அம்பலம் தொடர்ந்த தேர்தல் வழக்கில் தேர்தல் ஆணையம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆண்டி அம்பலத்தை விட 11 ஆயிரத்து 932 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் ஆண்டி அம்பலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

 அந்த மனுவில், அதிமுக எம்.எல்.ஏ. நத்தம் விஸ்வநாதன், தனது வேட்புமனுவில் பல தகவல்களை மறைத்துள்ளார். வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்து ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். வாக்குப்பதிவுக்கு முன் கடைசி 48 மணி நேரம், தேர்தல் நடத்தை விதிகளை மீறி பிரசாரத்தில் ஈடுபட்டார். தேர்தல் ஆணையம் நிர்ணயித்த உச்சவரம்புக்கு அதிகமாக தேர்தல் செலவு செய்துள்ளார் என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி சேஷசாயி, தேர்தல் ஆணையம், அதிமுக எம்.எல்.ஏ. நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் 6 வாரங்களில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டார்.

Related Stories: