சாப்பாடு இல்லை என்று கூறியதால் தாய் கொலை; கொடூர மகன் கைது: வேளச்சேரியில் பயங்கரம்

வேளச்சேரி: சோறு போட மறுத்த தாயை வெட்டிக்கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டார். வேளச்சேரியில் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சென்னை வேளச்சேரி, நேரு நகர், திருவிக. தெருவை சேர்ந்தவர் லட்சுமி (50). இவரது மகன் மூர்த்தி (30). இவர் கடந்த பல மாதங்களாக வேலைக்கு செல்லாமல் கிடைக்கும் பணத்தில் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து, தாயிடம் வாய்த்தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்றிரவு மூர்த்தி குடிபோதையில் வீட்டுக்கு வந்து தாயிடம் பசிக்கிறது சாப்பாடு கொடு என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு தாய், ‘’உணவு தீர்ந்துவிட்டது’’ என்று கூறியதால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த மூர்த்தி, சமையல் அறையில் இருந்த அரிவாள்மனையை எடுத்துவந்து தாய் லட்சுமியின் வயிறு உள்பட பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளார். அவர் ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்ததும் மூர்த்தி தப்பி ஓடிவிட்டார். இதன்பிறகு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது லட்சுமி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டது தெரிந்தது.

இதுபற்றி அறிந்ததும் வேளச்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று லட்சுமியின் சடலத்தை கைப்பற்றி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து நண்பரின் வீட்டில் பதுங்கியிருந்த மூர்த்தியை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>