திண்டுக்கல் மாவட்டத்தில் 2வது மெகா தடுப்பூசி முகாமில் 30,124 பேருக்கு தடுப்பூசி-குலுக்கலில் சிறப்பு பரிசுகளும் அறிவிப்பு

திண்டுக்கல் : தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவலை தடுக்க, தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.தமிழகம் முழுவதும் நேற்று 2வது முறையாக மெகா கொரானா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில், மெகா கொரோனா தடுப்பூசி முகாம் செப்.12ம் தேதி நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து, நேற்று 2வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. நேற்றைய முகாமில் முதல் தவணை தடுப்பூசி 23,147 பேருக்கும், இரண்டாவது தவணை தடுப்பூசி 6,977 பேருக்கும் என மொத்தம் 30,124 ேபருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளில் 320  சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடந்த சில மாதங்களாக கோவேக்ஸின் தடுப்பூசி போதுமான அளவு சப்ளை இல்லாத காரணத்தினால் பொதுமக்கள் அதிகளவில் கோவிட்சீல்டு தடுப்பூசியைப் போட்டுக் கொண்டனர்.

கொடைக்கானல் வடகவுஞ்சி கிராமத்திற்கு உட்பட்ட மேல் பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடந்தது. இந்த பகுதிகளில் வசிக்கும் மலை கிராம மக்களுக்கும், ஆதிவாசி பழங்குடியின மக்களுக்கும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது .இந்த தடுப்பூசி முகாமினை கொடைக்கானல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜய சந்திரிகா, ஏழுமலை ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர். வடகவுஞ்சி மேல் பள்ளம் பகுதியில் நடந்த தடுப்பூசி முகாமிற்கு வடகவுஞ்சி ஊராட்சி தலைவர் தோழி தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் துளசி முன்னிலை வகித்தார். 200க்கும் அதிகமான மலை கிராம மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

பாளையம் பேரூராட்சியில் நேற்று கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படுவதாக பாளையம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட குஜிலியம்பாறை, பாளையம், சேவகவுண்டச்சிபட்டி, ராமகிரி ஆகிய இடங்களில் நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு குலுக்கல் முறையில் முதல் பரிசு மிக்சி, 2ம் பரிசு குக்கர், 3ம் பரிசு மின்விசிறி, 4ம் பரிசு ஹெல்மெட் என அறிவிக்கப்பட்டதால் தடுப்பூசி போட மக்கள் ஆர்வம் காட்டினர். இம்முகாம் நடந்த இடங்களை பாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜலெட்சுமி நேரில் சென்று பார்வையிட்டார்.

ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள ஜோகிபட்டி ஊராட்சியில் உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி உத்தரவின் பேரில்  தடுப்பூசி முகாம் ஊராட்சித் தலைவர் சுப்பிரமணி தலைமையில் நடைபெற்றது. இதில் துணைத் தலைவர் கருணாநிதி, விஏஓ அன்பரசு, ஊராட்சி செயலர் ஈஸ்வரன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதுபோல், மாவட்டம் முழுவதும் நடந்த முகாம்களில் மக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

Related Stories: