பள்ளி மாணவன் மயங்கி விழுந்து சாவு

புழல்: சோழவரம் அருகே புதிய எருமைவெட்டிப்பாளையம், தேவனேரி கருமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவரது மகன் கணேஷ் (15). அதே பகுதியில் உள்ள  அரசு உயர்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் காலை கணேஷ், வழக்கம் போல் பள்ளிக்கு சென்றான். மாலை 3 மணியளவில் வகுப்பறையில் பாடங்களை  கவனித்து கொண்டிருந்த மாணவன் திடீரென மயங்கி விழுந்தான். இதை பார்த்ததும், ஆசிரியர் மற்றும் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவனது பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் பள்ளிக்கு வந்தனர்.

இதையடுத்து, கணேஷை மீட்டு ஜனப்பன் சத்திரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவனை பரிசோதனை செய்த டாக்டர்கள், வரும் வழியிலேயே கணேஷ் இறந்துவிட்டதாக கூறினர். தகவலறிந்து சோழவரம் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories:

>