18ம் கால்வாய் கரை உடைப்புகளால் தேவாரம் பகுதி கண்மாய்களுக்கு முழுமையாக தண்ணீர் வரவில்லை: விவசாயிகள் புகார்

தேவாரம்: 18ம் கால்வாய் மற்றும் நீர்வரத்து கால்வாய்களில் ஏற்பட்டுள்ள உடைப்புகளால் தேவாரம் பகுதி கண்மாய்களுக்கு முழுமையாக தண்ணீர் வருவதில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.  கம்பம் பள்ளத்தாக்கில் கோம்பை, தேவாரம், பண்ணைபுரம் பகுதிகளில் உள்ள 44 கண்மாய்களில் தண்ணீரை நிரப்பி பாசனத்துக்குபயன்படும் வகையில் 18ம் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, போடி பகுதி விவசாய நிலங்களும் பயன்பெறும் வகையில் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், 18ம் கால்வாயில் கடந்த ஆகஸ்ட்டில் தண்ணீர் திறக்கப்பட்டது. கூடலூர் வைரவன் ஆற்றில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் 40 கி.மீ பாய்ந்து தேவாரம் சின்னதேவி, பெரிய தேவியம்மன் கண்மாய், கோம்பை புதுக்குளம் ஆகிய குளங்களில் நிரப்பப்படும். அதன்பின் கிளை குளங்களுக்கு தண்ணீர் செல்லும். இதனால், பாசனத்திற்கு பயன்படுவது மட்டுமல்லாமல், 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் உயரும்.

இந்நிலையில், 18ம் கால்வாய் மற்றும் நீர்வரத்துக் கால்வாய் கரைகளில் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டுள்ளதால், தேவாரம் பகுதி கண்மாய்களுக்கு முழுமையாக தண்ணீர் வருவதில்லை என விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.  குறிப்பாக கம்பம், கம்பம்மெட்டு, கபுதுப்பட்டி, அனுமந்தன்பட்டி உள்ளிட்ட இடங்களில் 18ம் கால்வாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. இதை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் சங்கம் சார்பில் மஞ்சளாறு வடிநிலக்கோட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே, நீர்வரத்து கால்வாய்கள், 18ம் கால்வாயில் ஏற்பட்டுள்ள உடைப்புகளை சீரமைக்க வேண்டும் என தேவாரம் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: