தமிழக அரசு அறிவிப்பால் கும்பக்கரை அருவி தொடர்ந்து மூடல் : சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

பெரியகுளம்: தமிழக அரசு அறிவிப்பை தொடர்ந்து நேற்று திறக்கப்பட இருந்த கும்பக்கரை அருவி தொடர்ந்து மூடப்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.தேனி மாவட்டம், பெரியகுளத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் கும்பக்கரை அருவி உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கொடைக்கானல் மலையடிவாரத்தில் இயற்கை சூழ்ந்த சூழலில் அமைந்துள்ள இந்த அருவிக்கு, கொடைக்கானல் மலைப்பகுதி மற்றும் பெரியகுளம் பகுதியில் பெய்யும் மழையால் நீர்வரத்து இருக்கும். தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இந்த அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை இருக்கும். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக கொரோனாவால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லாமல், அருவி பகுதி மூடப்பட்டு இருந்தது.

இந்நிலையில், நேற்று முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளித்து அருவி திறக்கப்படுவதாக வனத்துறையினர் அறிவிப்பு அறிவித்திருந்தனர். ஆனால், நேற்று முன்தினம் தமிழக அரசு அனைத்து சுற்றுலாத் தலங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் நீர்வீழ்ச்சி பகுதிகளில் சுற்றுலாப்பயணிகளுக்கு கொரோனா அதிகம் பரவும் என்பதால், குற்றாலம், கும்பக்கரை, சுருளிதீர்த்தம் ஆகிய பகுதிகளுக்கு தமிழக அரசு தடை விதித்து சுற்றறிக்கை அனுப்பி இருந்தது. இதனால், நேற்று திறக்கப்பட இருந்த கும்பக்கரை அருவி தொடர்ந்து மூடப்பட்டுள்ளது. இதனால், நேற்று வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

Related Stories: