அதிமுக ஆட்சியில் விபத்து இறப்பு குறித்து தவறான தகவல் அளித்தது குறித்து விசாரணை கொடநாடு வழக்கில் உண்மை குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: தமிழக சட்டப் பேரவையில் நேற்று காவல் துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கைகளின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:  அதிமுக ஆட்சியில் சாலை விபத்துகள் குறைந்த மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது என்று ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருப்பதாக இங்கே பேசினார்கள். குற்றங்கள் மற்றும் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வலைப்பின்னல் வழிமுறை சிசிடிஎன்எஸ் புள்ளி விவரங்களை ஆய்வு செய்ததில் வேறு மாதிரியான தகவல்கள் கிடைத்துள்ளன.

காக்னோஸ் என்ற மென்பொருளைப் பயன்படுத்தி, சிசிடிஎன்எஸ் பெறப்பட்ட தகவல்களுக்கும், இதே திட்டத்தின்கீழ், பழைய முறைகளின்படி மாவட்டங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட தகவல்களுக்கும் இடையே வேறுபாடுகள் இருக்கின்றன. ஆகவே, விபத்து இறப்புகளைக் குறைப்பதில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதல் மாநிலம் என ஒன்றிய அரசுக்கும், உச்ச நீதிமன்றத்திற்கும் தவறான தகவல் தரப்பட்டுள்ளது என்பதை பதிவு செய்ய நான் விரும்புகிறேன். அதுகுறித்து விரிவான விசாரணைக்கு நான் உத்தரவிட்டிருக்கிறேன்.

சட்டத்தின் ஆட்சிக்கு இந்த அரசு மதிப்பளிக்கும். ஜெ.ஜெ. நகர் அம்மா உணவக சம்பவம், சென்னையில் ஆட்டோ ஓட்டுநர் பெண் ஆய்வாளரிடம் கொரோனா ஊரடங்கின்போது தகராறு செய்த சம்பவம், திருச்சி மாவட்டத்தில் மணல் கடத்தல் நடைபெற்றதாகக் கூறப்பட்ட நிகழ்வு, திருச்சி மாவட்டத்தில் நில அளவை தனி வட்டாட்சியர் தாக்கப்பட்டதாகக் கொடுக்கப்பட்ட புகார், திருநெல்வேலி மாநகர் கோட்டை காவல் நிலையத்தில் பெண் ஒருவரை சகோதரர் தாக்கியதால் கத்திக்குத்து நடைபெற்றிருக்கிறது.

இதுபோன்ற சம்பவங்களை இங்கே எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் எழுப்பினார்கள். அவை எல்லாவற்றுக்கும் புகார் அளிக்கப்பட்ட அதே நாளிலோ அல்லது அடுத்த நாளிலோ கைது செய்யப்பட்டு, சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டியிருக்கின்ற ஆட்சி தான் திமுக ஆட்சி. ஆனால், கடந்த அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட எவ்வளவு காலம் ஆனது என்பது உங்களுக்குத் தெரியும். அதேபோல, மறைந்த முதல்வர் ஜெயலலிதா முகாம் அலுவலகமாக செயல்பட்ட கொடநாடு பங்களாவில் நடைபெற்ற கொள்ளை, கொலை சம்பவங்களில் தொடர்புடையோர் கைது செய்யப்பட எவ்வளவு காலம் ஆனது என்பதையும் சற்று நீங்கள் எண்ணிப் பார்த்திட வேண்டும்.

காவல் துறை மானியக் கோரிக்கை விவாதத்தின் போது கடந்த 9ம் தேதியன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர், ‘கொடநாடு வழக்கை நடத்துங்கள், வேண்டாமென்று சொல்லவில்லை. புது விசாரணை செய்யுங்கள், நாங்கள் வேண்டாமென்று சொல்லவில்லை’ என்று சொன்னார். அதற்காக நான் அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். கொடநாடு வழக்கை நடத்துவோம். உண்மைக் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் தப்பிக்க முடியொதென்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

‘வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. வேண்டுமென்றே திட்டமிட்டு எங்கள் மீது குற்றம்சாட்டுவதைத் தவிர்க்க வேண்டும்’ என்று எதிர்க்கட்சித் தலைவர் அன்றைக்குச் சொன்னார். கொடநாடு வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போது இந்த அவையிலே கொடநாடு வழக்கு பற்றி முதலில் பேசியது யார்?. எதிர்க்கட்சித் தலைவர் தான். கடந்த ஆகஸ்ட் 18ம் நாளன்று இந்த அவையில் அந்த பிரச்னையைக் கிளப்பினார்கள். வெளிநடப்பு செய்தார்கள். வழக்கு முடியும் தருவாயில் இருக்கும்போது எதற்காக மேல் விசாரணை செய்ய வேண்டுமென்று பேட்டியும் கொடுத்தார். என்னைப் போன்றவர்களுக்கே திமுக ஆட்சியில் பாதுகாப்பில்லை என்றும் பேட்டியளித்தார்.

மறுநாள் ஆகஸ்ட் 19 அன்று ஆளுநரை சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் மனுவும் கொடுத்திருக்கிறார். நிர்பந்தம் காரணமாக காவல் துறையினர் மேல் விசாரணை நடத்துகிறார்கள் என்று குற்றம் சாட்டியிருக்கிறார். முடியும் தருவாயில் உள்ள வழக்கை மீண்டும் எதற்காக விசாரணை செய்கிறார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் கேட்டார். அதாவது, நீதிமன்றத்தில் உள்ள வழக்கை சட்டமன்றத்தில் எழுப்பியது யார்? நாங்களல்ல என்பதையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

போலீஸ் துறையில் இருக்கின்ற சிலபல குறைபாடுகள் நீக்கப்படுவதற்காக சமுதாயத்தினுடைய நேர்த்தியும் வளர வேண்டும். அது வளர வளர அந்தக் குறைபாடுகள் தானாகவே குறையுமென்று அண்ணா அரை நூற்றாண்டுக்கு முன்னரே சொல்லியிருக்கிறார். வெற்றி அலங்காரத்திற்காக அல்ல, அனைவரும் அகத்திலே கொள்வதற்காக அணுகுமுறையினைச் செம்மைப்படுத்திக் கொள்வதற்காக சொன்ன பொன்மொழி தான் அது. அந்த வழியில் தமிழ்நாடு காவல் துறை நமது அரசின் ஆட்சியில் செவ்வனே செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டை சட்டத்தின் ஆட்சியில் நாட்டிலே முதன்மை மாநிலமாக்கிட தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: