பலத்த போலீஸ் பாதுகாப்புடன் குந்தா அணையில் விநாயகர் சிலைகள் கரைப்பு

மஞ்சூர் : விநாயகர் சதுார்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட சிலைகள் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் குந்தா அணையில் நேற்று கரைக்கப்பட்டன.

விநாயகர் சதுார்த்தியை முன்னிட்டு குந்தா ஒன்றிய இந்து முன்னணி சார்பில் குந்தாபாலம், மஞ்சூர், கொட்டரகண்டி, கரியமலை, துானேரி, ஓணிகண்டி, சேரனுார், கோலட்டி, முள்ளிகூர்ஆடா, பிக்கட்டி, சிவசக்திநகர், கவுண்டம்பாளையம், பாதகண்டி, எடக்காடு உள்பட 15 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. பெரும்பாலான சிலைகளும் அந்தந்த பகுதிகளில் உள்ள கோயிகளில் வைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வந்தது.

 இதை தொடர்ந்து நேற்று மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த 7 விநாயகர் சிலைகள் வாகனங்கள் மூலம் குந்தா சிவன் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து குந்தா ஒன்றிய இந்து முன்னணி துணை தலைவர் ரகுராம், ஒன்றிய பொறுப்பாளர்கள் பிரகாஷ், நவரத்தினம், மோகன், ரஞ்சித், கோபி ஆகியோர் முன்னிலையில் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து சிலைகள் அனைத்தும் குந்தா அணையில் கரைக்கப்பட்டன.

மேலும் மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் பொதுமக்கள் தங்களது வீடுகளில் வைத்து பூஜித்த விநாயகர் சிலைகளையும் எடுத்து சென்று குந்தா அணையில் கரைத்தார்கள். இதேபோல்  எடக்காடு, எமரால்டு சுற்றுபுற பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வைக்கப்பட்ட 21 சிலைகள் வாகனங்கள் மூலம் கொண்டு வரப்பட்டு எடக்காடு அருகே உள்ள பிகுளி ஆற்றில் கரைக்கப்பட்டது. இதை முன்னிட்டு ஊட்டி ரூரல் இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சிலைகள் வைக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

கூடலூர்:

கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் வீடுகளில் வைத்து பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் ஆற்றில் கரைக்கப்பட்டன.  கூடலூர், ஓவேலி, தேவர்சோலை பகுதிகளில்  இந்து முன்னணி சார்பில் பூஜைக்கு வைக்கப்பட்ட 26 சிலைகள் இரும்பு பாலம் பகுதியில் உள்ள பாண்டியாற்றில் கரைக்கப்பட்டன. மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் போலீசார் சிலைகள் எடுத்து வருபவர்களை ஆறுகளில் இறங்க அனுமதிக்கவில்லை. அப்பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர்கள் சிலைகளை வாங்கி ஆறுகளில்  கரைத்தனர்.

Related Stories: