முதல்வர் யோகியின் சாதனையில் சர்ச்சை உபி அரசு விளம்பரத்தில் கொல்கத்தா மேம்பாலம்: திரிணாமுல் காங்கிரஸ் கிண்டல்

கொல்கத்தா:  உத்தரப் பிரதேச மாநில அரசு வெளியிட்டுள்ள விளம்பரத்தில் கொல்கத்தாவின் மேம்பால படம் இடம் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது. உத்தரப் பிரதேசத்தில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறையும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதில் பாஜ தீவிரம் காட்டி வருகிறது. ஆனால், கொரோனா தொற்றை கையாண்ட விதத்தில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு தோல்வி அடைந்து விட்டதாக குற்றச்சாட்டு உள்ளது. கொரோனாவில் இறந்தவர்களின் சடலங்கள் கங்கை ஆற்றில் வீசப்பட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் ஊடகங்கள், சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், ‘முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் உத்தரப் பிரதேசம்’ என்ற தலைப்பில் செய்திதாள்களில், சாதனை விளம்பரம் வெளியிடப்பட்டது.

இதில், நீலம் மற்றும் வெள்ளை நிற பெயின்ட் அடிக்கப்பட்ட மேம்பாலத்தின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. இது, மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் இருக்கும் மேம்பாலமாகும். அதனால், இந்த விளம்பரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி மேற்கு வங்க ஆளும் திரிணாமுல் காங்கிரசின் தேசிய பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘யோகி ஆதித்யநாத்தின் தலைமையின் கீழ் உத்தரப் பிரதேசத்தை மாற்றுவது என்பது, மம்தா பானர்ஜி தலைமையில் மேற்கு வங்கத்தில் காணப்படும் உள்கட்டமைப்பு படங்களை திருடி அதனை தன்னுடைய சாதனையமாக பயன்படுத்துவதாகும். பாஜ.வின் வலிமையான மாநிலத்தில் இரட்டை இன்ஜின் மாதிரி முற்றிலும் தோல்வி அடைந்துள்ளது என்பதையே இது காட்டுகிறது,’ என கிண்டலடித்து உள்ளார்.

* பத்திரிகை வருத்தம்

செய்தித்தாளின் மார்க்கெட் பிரிவு சார்பில் தயாரிக்கப்பட்ட இந்த விளம்பரத்தில் கவனக்குறைவாக தவறான படம் சேர்க்கப்பட்டுள்ளது, எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட இந்த தவறு மிகுந்த வருத்தம் அளிப்பதாக சம்பந்தப்பட்ட செய்திதாள் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

Related Stories: